×

எக்டருக்கு 3 டன் விளைச்சல்… பூச்சித் தாக்குதல் குறைவு… வறட்சியை தாங்கும்..

நாவின் சுவையைவிட, நலம் தரும் உணவே உடலுக்கு உகந்தது. எனவே தான், உணவே மருந்தென வாழ்வியல் முறையை வகுத்தனர் முன்னோர். இயற்கையின் கொடையான சிறுதானியங்களே நமது ஆரோக்கியத்தின் அடித்தளமாகும். எனவேதான், அன்றாட உணவு முறையில், சிறுதானியங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இடம் பெற்றன. தினை, வரகு, சாமை, கேழ்வரகு, சோளம், கம்பு போன்ற சிறு தானியங்களில் நுண்ணூட்டச் சத்தும், உயிரியக்கக் கூறுகளும் அதிகம்.

அவசரயுகத்தில் ஆரோக்கியத்தை இழந்த பிறகே, சிறுதானியங்களின் மகத்துவத்தை உணரும் வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. அதனால்தான், 2023ம் ஆண்டினை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், சிறுதானிய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக வந்திருக்கிறது. கேழ்வரகு ஏடிஎல்-1 எனும் புதிய ரகம். திருவண்ணாமலை அருகேயுள்ள அத்தியந்தல் கிராமத்தில் செயல்படும் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் சிறுதானிய மகத்துவ மையம், தமது தொடர் ஆய்வின் மூலம் ‘கேழ்வரகு ஏடிஎல்-1’ புதிய ரகத்தை உருவாக்கியிருக்கிறது. ஒரு ஏக்கரில் கேழ்வரகு பயிரிடப்பட்டுள்ளது.

அதிக மகசூல், குறுகிய கால ரகம், பூச்சித்தாக்குதல் குறைவு, கூடுதல் சுவை, சத்துக்கள் அதிகம் என்று பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரகம். சிறுதானியங்களில் பெரிதும் வரவேற்பை பெற்றது கேழ்வரகு. எனவே, அதன் தேவை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. அதனால், கேழ்வரகு ஏடிஎல்-1 ரகம் பரவலாக சாகுபடி செய்தால், விவசாயிகளுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். கேழ்வரகு ஏடிஎல் -1 புதிய ரகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து, திருவண்ணாமலை அருகே அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் எம்.வைத்தியலிங்கம் மற்றும் பேராசியர் பி.சுதாமதி ஆகியோர் கூறியதாவது:

அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தின் மூலம், பனிவரகு, சாமை, வரகு, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் 9 புதிய ரகங்களை இதுவரை அறிமுகப்படுத்தி உள்ளோம். அதில், கேழ்வரகு ஏடிஎல்-1 ரகம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனை, பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பிறகு, சாகுபடிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இந்த புதிய ரகம் வயது குறைவானது. அதிகபட்சம் 105 முதல் 110 நாட்களுக்குள் மகசூல் தரும். மேலும், ஒரு ஹெக்டருக்கு அதிகபட்சம் 2,700 கிலோ முதல் 3,000 கிலோ (3 டன்) வரை தானிய மகசூல் கிடைக்கும். சரியான இடைவெளியில் நடவு செய்தால், விதை நேர்த்தி செய்த விதைகளை பயன்படுத்தினால் கூடுதலாக 10 சதவீதம் வரை மகசூல் பெறலாம்.
கேழ்வரகு ஏடிஎல்1 ரகத்தை சாகுபடி செய்ய ஆடி மற்றும் புரட்டாசி பட்டம் உகந்ததாகும். அதேபோல், தீவன மகசூல் ஒரு ஹெக்டருக்கு அதிகபட்சம் 4 டன் வரை கிைடப்பது இதன் சிறப்பு அம்சமாகும். அதோடு, இந்த கேழ்வரகுப் பயிரின் தண்டு உறுதியானது. கடும் காற்றினாலும், கதிர் முற்றினாலும் சாயாது. தீவனத்திலும் கூடுதல் லாபம் பெறலாம். அதோடு, தானிய கரிப்பூட்டை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. இலைக் கருகல் நோய் பாதிப்பு குறைவு, தண்டு உறுதி என்பதால், மகசூல் இழப்பு ஏற்படாது. குறிப்பாக, வறட்சியை தாங்கக் கூடிய திறன் அதிகம். தண்ணீர் தேவையும், இடுபொருட்கள் தேவையும் மிகவும் குறைவு.

இயற்கை வேளாண் சாகுபடிக்கு ஏற்ற ரகமாகும். எனவே, விவசாயிகளுக்கு எல்லா வகையிலும் இந்த புதிய ரகம் லாபம் தரக்கூடியதாகவே அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். மேலும், ஏடிஎல்1 ரக கேழ்வரகில், மாவு ஆகும் திறன் 92 சதவீதமாக உள்ளது. அதோடு, 100 கிராம் கேழ்வரகில், 325 மில்லி கிராம் சுண்ணாம்புச்சத்து உள்ளது. இது, உடல் உறுதிக்கு ஏற்றது. எனவே, கேழ்வரகு சாகுபடியில் ஈடுபட விரும்பும் விவசாயிகள், ஏடிஎல் 1 ரகத்தை சாகுபடிசெய்து அதிக லாபம் பெறலாம். ஏடிஎல் 1 ரக கேழ்வரகு விதையை, அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஒருமுறை சாகுபடி செய்தால், அந்த தானியங்களை மறுமுறை விதையாகவும் பயன்படுத்தலாம். விவசாயிகளுக்கு தேவையான சாகுபடி வழிமுறைகள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளையும், சிறுதானிய மகத்துவ மையம் மூலம் வழங்குகிறோம். அதனை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.

கேழ்வரகு சாகுபடி செய்வது எப்படி?

கேழ்வரகு சாகுபடி குறித்து, திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.ஹரகுமார்

ஆலோசனைகள்:
கேழ்வரகு பயிரிடுவதற்கு, நிலத்தை இரண்டு முறை நன்கு உழவுசெய்த பின்பு 3வது உழவில் தொழுஉரம் இட வேண்டும். விதைகள் நல்ல வீரியத்துடன் முளைப்பதற்கு, பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன், ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் விதைப்பு: கேழ்வரகு பயிர் நாற்றங்கால் முறையில் பயிரிட, ஹெக்டருக்கு 5 கிலோ விதையளவும், நேரடி விதைப்பிற்கு 10 முதல் 15 கிலோ விதையளவும் தேவைப்படும்.

நடவு: கேழ்வரகு சிறுதானியப் பயிரினை சாகுபடி செய்வதற்கு 18 முதல் 21 நாட்கள் வயதுடைய நாற்றுகளை குத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாற்றுகள் வீதம் 15க்கு15 செ.மீ அல்லது 22.5க்கு10 செ.மீ இடை
வெளியில் நடவு செய்யலாம்.

உர நிர்வாகம் மற்றும் நுண்ணுயிர் உரங்கள்: பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை, மணி, சாம்பல் சத்துக்களை ஹெக்டருக்கு முறையே 90:45:45 கிலோ அளவில் இட வேண்டும். 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியத்தை மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு ஹெக்டர் நிலத்தில் பரப்பலாம்.
இறைவையில் 5 பாக்கெட் அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு ஹெக்டருக்குத் தேவையான நாற்றுகளை 15-30 நிமிடம் வேர் மூழ்கும்படி நனைத்து நடவு செய்யலாம்.

களை நிர்வாகம்: கேழ்வரகு சிறுதானியப் பயிரில் களைகளை கட்டுப்படுத்துவதற்கு விதைத்த அல்லது நட்ட 18ம் நாள் ஒரு களையும், 45ம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு: கேழ்வரகை பொதுவாக பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை. எனினும், பருவ மாற்றத்திற்கு ஏற்ப வெட்டுப்புழுக்கள், தண்டுத் துளைப்பான்கள், சாறு உறிஞ்சிகள், வேர்அசுவிணி முதலிய பூச்சிகள் தாக்கலாம். வெட்டுப்புழுக்களைக் கட்டுப் படுத்த மாலத்தியான் 5 மில்லி மருந்திற்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும். தண்டுத் துளைப்பான்களை கட்டுப்படுத்த தூர்கட்டும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் குளோர்பைரிபாஸ் 5 மில்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

கேழ்வரகினை குலைநோய், செம்புள்ளி, தேமல்நோய் தாக்கலாம். குலை நோயினைக் கட்டுப்படுத்த கார்பென்டசிம் 2.5 கிராம் மருந்திற்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். கேழ்வரகுப் பயிரில் தோன்றும் செம்புள்ளி நோயை கட்டுப்படுத்த மேன்கோசெப் மற்றும் கார்பன்டசிம் என்ற பூச்சிக் கொல்லியை 1 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் மருந்து என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

தொடர்புக்கு:
பேராசிரியர் வைத்தியலிங்கம் 9344769183.

The post எக்டருக்கு 3 டன் விளைச்சல்… பூச்சித் தாக்குதல் குறைவு… வறட்சியை தாங்கும்.. appeared first on Dinakaran.

Tags :
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்