×

ஆண்டிபட்டியில் கொட்டிய மழையால் ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு: மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், ஆண்டிப்பட்டி நகரில் சாலையில் மழைநீர் வெள்ளம் போல ஓடியது. ஆண்டிபட்டியில் இருந்து தெப்பம்பட்டி செல்லும் சாலையில், அமைக்கப்பட்டுள்ள ரயில்வே பாலத்தில் 2 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. அந்த பாலத்தில் இயக்கப்பட்ட ஒரு சில வாகனங்களும் தண்ணீரில் சிக்கி பழுதடைந்தது. குறிப்பாக பைக்கில் சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி பரிதவித்தனர். இதன் காரணமாக ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிபட்டியில் இருந்து தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, கதிர்நரசிங்கபுரம், கொத்தப்பட்டி, ராஜதானி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ரயில்வே தண்டவாளத்தின் வழியாக மறுகரைக்கு நடந்து சென்று, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏறி தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

ஆண்டிபட்டி நகரில் மழை பெய்யும் போதெல்லாம் ரயில்வே பாலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. ரயில்வே பாலங்களில் மழைதண்ணீர் தேங்காதவாறு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியிருந்ததால் இந்த சாலையில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். நீண்ட நேரம் ஆண்டிபட்டியில் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் ரயில்வே பாலத்தில் தேங்கிய தண்ணீரை அகற்றி அந்த வழித்தடத்தில் உடனடியாக போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று கூறி தேனி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தேனி-மதுரை சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த ஆண்டிபட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போர்க்கால அடிப்படையில் ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் தேனி-மதுரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலையில் பாலத்தின் இருபுறமும் ஆட்டோவை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால், சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post ஆண்டிபட்டியில் கொட்டிய மழையால் ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு: மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : antipatti ,Theni district ,Andipatti ,Railway Bridge ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டியில் ஆச்சர்யம் வெள்ள காக்கா பறக்குது பாரு…