×

கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் உபரிநீர் 78,000 கனஅடி திறப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 57 அடியாக உயர்ந்தது: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து 78 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 57 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மற்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணையிலிருந்து மட்டும் தற்போது விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல மற்ற அணைகளில் இருந்து 8 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை, ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இது படிப்படியாக அதிகரித்து, நேற்று மாலை 3 மணிக்கு 48 ஆயிரம் கனஅடியானது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயினருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்கிறது.

கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு இன்று காலைக்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் செய்யவும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. மேலும் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாடார்கொட்டாய், ஊட்டமலை, சத்திரம் மற்றும் நெருப்பூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை, காவிரியின் நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 31,102 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 44,353 கனஅடியாக அதிகரித்தது.

இதன்காரணமாக நேற்று முன்தினம் மாலை 51.38 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று மாலை 56.90 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நீர்மட்டம் 5.52 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 22.43 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, 4வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மேலும், செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து 4வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

The post கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் உபரிநீர் 78,000 கனஅடி திறப்பு மேட்டூர் அணை நீர்மட்டம் 57 அடியாக உயர்ந்தது: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Matur Dam ,Kaviri ,Pennagaram ,Mattur Dam ,Kerala ,Karnataka dams ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18,000...