×

இதய நோயால் மருத்துவமனையில் தாய் அனுமதி பசியால் தவித்த 4 மாத குழந்தைக்கு பால் கொடுத்த பெண் போலீஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் 4 மாத குழந்தைக்கு தாயாக மாறி ஒரு பெண் போலீஸ் பால் கொடுத்தார். பாட்னாவை சேர்ந்த ஒரு தொழிலாளி குடும்பத்துடன் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். கடைசி குழந்தை பிறந்து 4 மாதம்தான் ஆகிறது. இந்த தொழிலாளியின் மனைவிக்கு இதயக் கோளாறு உள்ளது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அடிதடி வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அவரது மனைவியும், குழந்தைகளும் மட்டுமே வீட்டில் இருந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த பக்கத்தினர் அவரை மீட்டு எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்த பெண்ணின் 4 மாத குழந்தை உள்பட 4 குழந்தைகளும் தனியாக இருப்பதை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுகுறித்து கொச்சி போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு சென்றபோது 4 மாத குழந்தை பசியால் கதறி அழுது கொண்டிருந்தது. அதை பார்த்த ஆர்யா என்ற பெண் போலீஸ் ஒரு நிமிடம், தான் போலீஸ் என்பதை மறந்து அந்த குழந்தைக்கு தாயாக மாறினார். உடனே அந்தக் குழந்தையை கையில் எடுத்து அதற்கு பால் கொடுத்தார். சிறிது நேரத்திலேயே பசி நீங்கி அந்த குழந்தை சிரிக்க தொடங்கியது. அதன் பிறகு போலீசார் 4 குழந்தைகளையும் கொச்சியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். பெண் போலீஸ் ஆர்யாவின் இந்த செயலை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

The post இதய நோயால் மருத்துவமனையில் தாய் அனுமதி பசியால் தவித்த 4 மாத குழந்தைக்கு பால் கொடுத்த பெண் போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kochi, Kerala ,
× RELATED மலையாள நடிகையின் புகாரில் பலாத்கார...