×

குட்கா விற்பனையில் கமிஷன் பெறுவதில் குறியாக இருந்து விட்டு சுகாதாரத்துறை தூங்குகிறது என குறை கூறுவதா? விஜயபாஸ்கருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

சென்னை: சுகாதார துறையை நிர்வகிக்க கூறினால் குட்கா பான்பராக் விற்பனை செய்வதிலும் அதில் கமிஷன் பெறுவதிலும் குறியாக இருந்து விட்டு இப்பொழுது இந்த துறை தூங்குவதாக கூறுகிறார் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். சென்னை, கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உள்நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மாதம் 15ம் தேதி கலைஞர் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் 400 பேர் அளவிற்கு புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 5176 அதில் 114 பேருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனையும், 136 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை, 206 பேருக்கு ஸ்கேன், 37 பேருக்கு குடல் உள்நோக்கு சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாம் தேதியிலிருந்து உள் நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் 22 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திங்கட்கிழமை முதல் இங்கேயே அறுவை சிகிச்சைகள் செய்வதற்குரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையிலும் இந்த மருத்துவமனை அத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மருத்துவத்துறை ஐசியூவில் இருப்பதாக கூறுகிறார், யார் ஐசியூவில் இருந்தது என்று அவருக்கே தெரியும். இந்த அரசு அமைந்த பிறகு தான் தமிழகத்திற்கு என்று பல் மருத்துவக் கல்லூரி வந்திருக்கிறது.

இந்த துறையை நிர்வகிக்க கூறினால் குட்கா பான்பராக் விற்பனை செய்வதிலும் அதில் கமிஷன் பெறுவதிலும் குறியாக இருந்து விட்டு இப்பொழுது இந்த துறை தூங்குவதாக கூறுகிறார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்த ஆட்சியில் மூன்று கல்லீரல் மாற்ற அறுவை சிகிச்சை செய்து காட்டியுள்ளோம். முன்னாள் அமைச்சர் மருத்துவராக இருப்பவர் அரசியல் நோக்கத்தோடு இதை அணுகுவது சரியில்லை. அந்த குழந்தைக்கு நடந்த சம்பவம் சோகமான சம்பவம் தான். இப்பொழுது குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அவர்கள் தெளிவான அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் கொடுத்திருக்கும் அறிக்கையை வேறு மருத்துவரிடம் பெற்றோர் எடுத்துச் சென்று அதில் குறை இருந்தால் கூறலாம் என்றும் பெற்றோர்களிடம் கூறியுள்ளோம். இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் தெளிவான அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள் குழந்தையின் பெற்றோருக்கு நீதி வேண்டுமேயானால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம்.

அதைத் தொடர்ந்து பேசிய ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் கூறுகையில்: குழந்தை அடிப்படையில் குறை பிரசவத்தில் பிறந்ததால் பல்வேறு உபாதைகளும் பிரச்னைகளும் ஒன்றுக்கு பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. அங்கே வேலை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு ஒளிவு மறைவு இன்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தனியார் மருத்துவர் வைத்து இந்த அறிக்கை சரி தானா என்பதை மீண்டும் பரிசோதித்து பார்க்கலாம். இவ்வாறு கூறினர்.

The post குட்கா விற்பனையில் கமிஷன் பெறுவதில் குறியாக இருந்து விட்டு சுகாதாரத்துறை தூங்குகிறது என குறை கூறுவதா? விஜயபாஸ்கருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Gutka ,Minister ,M. Subramanian ,Vijayabaskar ,CHENNAI ,Subramanian ,
× RELATED பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை...