×

அரசின் இலக்கு

த மிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்யவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஜிடிபி 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பது முதலமைச்சரின் லட்சிய கனவாக உள்ளது. அந்த இலக்கை நனவாக்க, தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு தொழில்முனைவோரின் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில், ஐக்கிய அமீரகத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு முதலீடு திட்டங்களை மேற்கொண்டார். தைவான் காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் பூவின் தலைவரான டி.ஒய். சாங் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தற்போது, ​​சென்னை போரூரில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிட்டாச்சி குழும துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மையம் மற்றும் புத்தாக்க மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்துள்ளார். 3 லட்சம் சதுரடியில் அமைய உள்ள இந்த புத்தாக்க மையத்தின் மூலம் 2,500 பேருக்கு உயர் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, மாநிலத்தின் பொருளாதாரம் சுமார் 290 பில்லியன் டாலர் ஆகும். 2022-23 பட்ஜெட் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளபடி, 2021-22க்கான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) மதிப்பு ரூ.21,79,655 கோடி ஆக உள்ளது. 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய ஒரு ஆண்டிற்கு 13-13.5% வளர்ச்சி தேவைப்படும். முதல் ஆண்டில் நமது மாநிலத்தில் வளர்ச்சி 14.5% ஆக உள்ளது. நமக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளதால், அடுத்தடுத்த ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சி 14% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களின் மேம்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இத்துறையின் வளர்ச்சி வரும் ஆண்டுகளில் வளர்ச்சி 12% ஆக இருந்தால்கூட மாநில பொருளாதாரம் 750 பில்லியன் டாலராக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, மின் வாகனங்கள், தோல் அல்லாத காலணிகள், பின்டெக், ஜவுளி, பாதுகாப்பு உற்பத்தி ஆகியவற்றுக்கும் தமிழ்நாடு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஐடி மற்றும் ஐடி தொடர்பான தொழில்களை இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கு எடுத்துச்செல்வதிலும் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
பின்னலாடை நகரமான திருப்பூரில் ஜவுளி மையம் உருவாக்கவும், உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கும் அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது. அனைவருக்கும் வளர்ச்சி என்பதில், தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்து, பொருளாதார வளர்ச்சியை கைவிட்டு விடக்கூடாது என்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த தொடர் நடவடிக்கை காரணமாக, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது சாத்தியமான ஒன்றுதான், இதே வேகத்தில் பயணிக்கும்போது அடுத்த 7 ஆண்டுகளில் நம்மால் இந்த இலக்கை அடைய முடியும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

The post அரசின் இலக்கு appeared first on Dinakaran.

Tags :
× RELATED 56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவி கேட்கும்...