×

அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு: 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநில மக்கள் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு பதிவு இன்று நடக்கிறது. தேர்தல் களத்தில் உள்ள 2,613 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை 5.21 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்களிப்பின் மூலம் தீர்மானிக்கவுள்ளனர். கர்நாடகா சட்டப்பேரவைக்குமே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணைய ராஜீவ்குமார் கடந்த மார்ச் 29ம் தேதி அறிவித்தார். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் மொத்தம் 2,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு ஆளும் பாஜ, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் இடையே போட்டி நிலவுகிறது. அங்கு ஒரு மாதமாக நடந்த அனல் பறக்கும் பிரசாரத்தில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று 224 தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடிக்கும். 5 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 579 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக நகர பகுதியில் 24 ஆயிரத்து 063 மற்றும் ஊரக பகுதியில் 34 ஆயிரத்து 219 என மொத்தம் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 12 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் சுமார் 3 லட்சம் பேர் ஈடுபடுகிறார்கள். தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் தவிர்க்க 2,400 சிறப்பு பார்வையாளர்கள், 2,400 கண்காணிப்பாளர்கள், 2,016 பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

மேலும் ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் பெண் ஊழியர்கள் நிர்வகிக்கிறார்கள். 226 வாக்குச்சாவடிகள் இளைஞர்கள் நிர்வகிக்கிறார்கள். 224 பேரவை தொகுதிக்கு தலா ஓரு இளைஞர் வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 1.56 லட்சம் பேர் தேர்தலில் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க மாநில போலீஸ், துணை ராணுவப்படை உள்பட 1.56 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி மே 13ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

* கர்நாடக வாக்காளர்களுக்கு மோடி பகிரங்க கடிதம்
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், ‘கர்நாடக மக்களே! நீங்கள் என் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்தீர்கள். இந்தியர்களாகிய நாம் நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதற்காக இலக்குடன் பணியாற்றி வருகிறோம். கர்நாடக மாநிலம் அதன் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உள்ளது.

கர்நாடகா மாநிலம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக வளர வேண்டும். முதலீடு, தொழில் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கர்நாடகாவை நம்பர் 1 மாநிலமாகவும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் நம்பர் 1 ஆகவும் மாற்ற விரும்புகிறோம். எனவே தேர்தல் நாளில் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார்.

* 40% கமிஷன் கேட்ட பாஜ அரசு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: அரசு ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கோரிக்கை

அரசு ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா விடுத்துள்ள அறிக்கையில், ‘கர்நாடக மாநிலத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு பொதுப்பணித்துறை திட்டத்துக்கு 40 சதவீத கமிஷன் கேட்டு தொல்லை கொடுத்தனர். இதனால் பல ஒப்பந்ததாரர்கள் உயிரை விட்டனர். எனவே மக்கள் தங்கள் வாக்குகளை பதிவிடும் போது சிந்தித்து செயல்பட்டு ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். ஒப்பந்ததாரர் சந்தோஷிடம் பில் தொகையை ெபறுவதற்காக 40 சதவீத கமிஷன் கேட்டு தொல்லை கொடுத்தார்கள்.

இதனால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய திட்டப்பணிகளுக்கான நிலுவை தொகை இன்னும் வழங்கவில்லை. இதற்காக மாவட்ட நிர்வாக அலுவலகம் முன் போராட்டம் நடத்தினோம். ஆனால் எந்த பயனும் இல்லை. பல்வேறு அரசு துறைகளில் திட்டப்பணிகளுக்கான பில் தொகை ரூ.22 ஆயிரம் கோடியை பெங்களூரு மாநகராட்சி விடுவிக்காமல் நிறுத்திவைத்துள்ளது. எனவே கர்நாடக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு: 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...