×

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்ப டாக்டர், நர்ஸ்களை நியமிக்க வேண்டும் : அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அச்சங்கத்தின் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 10 வருடமாக ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மருத்துவமனைகள், புதியதாக ஆரம்பிக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் புதிய மருத்தவர் பணியிடங்களை உருவாக்கவில்லை. கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்ட 20 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் தான் உள்ளது. ஆனால் புதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட 20 ஆயிரம் மருத்துவர் பணியிடங்களில் 6 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதேபோல் செவிலியர் பணியிடங்கள் 35ஆயிரம் காலியாக உள்ளது.

சீமாங் திட்டத்தை ஆரம்பிக்கும் போது அங்கு பணிபுரிந்து மருத்துவர்களை மாற்றுப் பணியில் அமர்த்தினர். அந்த திட்டத்திற்கு என புதியதாக மருத்துவர்களை நியமனம் செய்யவில்லை. விபத்து அவசர சிகிச்சையை அளிக்கும் தாய் திட்டத்திற்கும் புதியதாக மருத்துவர்களை நியமனம் செய்யவில்லை. எனவே அரசு மருத்துவர்கள் செவிலியர்கள், ஊழியர்கள் ஆகிய அனைத்து காலிப்பணிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஏற்ப மருத்துவர்கள் ,செவிலியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. குறைந்த அளவில் மருத்துவர்களை வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் மருத்துவர்களை பணி செய்ய அழுத்தம் தருகின்றனர். இதனால் மக்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாத நிலையும், மருத்துவர்களின் உடல் நலன் பாதிப்பும் ஏற்படுகிறது.

எனவே அரசு அனைத்து மருத்துவமனைகளிலும் சுழற்சி முறையில் பணி செய்யும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் போதுமான அளவிற்கு மருத்துவர்கள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பணியில் 2 மருத்துவர்கள் இருக்கும் அவலநிலையும் உள்ளது. எனவே 7 மருத்துவர்களை நியமனம் செய்து சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும். மருத்துவர்கள் நியமனம் செய்ய நிதி இல்லை என நிதித்துறை கூறுகிறது. எனவே மருத்துவர்களை நியமனம் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவத்துறையில் உள்ள பிரச்சனைகளை முதலமைச்சர் தலையிட்டு சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்ப டாக்டர், நர்ஸ்களை நியமிக்க வேண்டும் : அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Government Doctors Association ,CHENNAI ,Association of Government Doctors and Graduate Doctors ,Press Forum ,Chepauk, Chennai ,Saminathan ,general secretary ,Ramalingam ,
× RELATED காய்ச்சல் நோயாளிகளை ‘அட்மிட்’...