×

தமிழகத்தில் ரூ.10,000 கோடிக்கு பிரியாணி வணிகம்: சென்னை மிகப்பெரிய பிரியாணி சந்தையானது

சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும், மிகப்பெரிய பிரியாணி சந்தையாக சென்னை விளங்குவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரியாணி என்பதை உணவு வகைகளில் ஒன்றாக மட்டும் கருதாமல் அதனை தமிழ்நாடு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பிரியாணி விற்பனை நடந்து வருகிறது. முன்பெல்லாம் பிரபல பெரிய ஓட்டல்களில் வகை வகையாக பிரியாணிகள் கிடைககும். ஆனால் தற்போது சிறு சிறு கடைகள் ஏராளமாக முளைத்தன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இரவுகளிலும் பிரியாணி கடைகள் திறந்திருக்கின்றன.

பிரியாணியில் பல வகை உண்டு. பாஸ்மதி அரிசி பிரியாணி, சீரக சம்பா அரிசி, சொந்த மசாலா என கடை உரிமையாளர்கள் பெயர் வைத்து விடுகின்றனர். அதிலும் ஊருக்கு ஊர் சிறப்பு மிக்க பிரியாணி கடைகள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றன. இத்தகைய சிறப்பாக இருப்பதால் அக்டோபர் 11ம் தேதி உலக பிரியாணி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த பிரியாணி என்பது உண்மையில் பெர்சியாவில் தோன்றி, அண்டை நாட்டு படையெடுப்புகள் மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தது என்றும், முகலாயர்கள் மூலம் இந்தியாவுக்குள் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் தகவல்கள் கூறுகின்றன. கோழிக்கறி, ஆட்டுக்கறி, இறால், மீன் என பல அசைவ பிரியாணிகள் உள்ளன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைத் தரும் என்பதாலும், பிரியாணிப் பிரியர்களுக்கு பிரியாணி என்று சொல்லிவிட்டாலே பசியெடுத்துவிடும் என்று சொல்லுமளவுக்கு இந்தியர்களை இந்த பிரியாணி கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. மேலும் எத்தனை உணவகங்கள் இருந்தாலும் வருத்தமோ, மகிழ்ச்சியோ, கொண்டாட்டமோ, குடும்ப விழாவோ.. விருந்தென்று முடிவு செய்துவிட்டால், பலர் முதன்மையாக பிரியாணிதான் தேர்வு செய்கின்றனர். மொத்தத்தில் பிரியாணி என்றால் உணவு மட்டுமல்ல, அது ஒரு எமோஷன் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில், முன்னணி பெயர் கொண்ட பிரியாணி கடைகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.2,500 கோடிக்கு வணிகம் நடப்பதாகவும், பதிவு செய்யப்படாத சிறு கடைகள் மற்றும் சாலையோர உணவகங்களின் மூலம் ரூ.7,500 கோடி அளவுக்கு பிரியாணி வணிகம் நடப்பதாகவும் மொத்தமாக, தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பிரியாணி விற்பனையாவதாகவும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டு மொத்த பிரியாணி வர்த்தகத்தில் சென்னையில் மட்டும் 50 சதவிகித விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

The post தமிழகத்தில் ரூ.10,000 கோடிக்கு பிரியாணி வணிகம்: சென்னை மிகப்பெரிய பிரியாணி சந்தையானது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...