×

தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம் சவரன் ரூ.46 ஆயிரத்தை தாண்டியது: 3 நாளில் ரூ.920 எகிறியது; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,160 ஆக விற்பனையானது. வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் உருவானதை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 24ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.45,400க்கு விற்கப்பட்டது. 25ம் தேதி தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் ரூ.45,240க்கு விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. 26ம் தேதி மீண்டும் அதிரடியாக உயர்வை சந்தித்தது.

அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,700க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,600க்கும் விற்கப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. நேற்று முன்தினம் மேலும் தங்கம் விலை அதிகரித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,705க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,640க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,770க்கும், சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,160 என்று விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

அதாவது, இதற்கு முன்னர் கடந்த மே மாதம் 4ம் தேதி ஒரு கிராம் ரூ.5,750க்கும், சவரன் ரூ.46,000 ஆகவும் விற்கப்பட்டது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலையாக இருந்தது. இந்த சாதனையை நேற்றைய தங்கம் விலை உயர்வு முறியடித்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகை நேரத்தில் அரசு, தனியார் நிறுவனத்தில் போனஸ் வழங்குவது வழக்கம்.

இந்த போனஸ் பணத்தை பயன்படுத்தி தீபாவளி சமயத்தில் நிறைய பேர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் விலை அதிகரிப்பு அவர்களை கவலையடைய செய்துள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: தங்கம் விலை வரலாற்றில் சவரன் 46,160 என்பது அதிகப்பட்சம் விலையாகும். உலக அளவில் பொருளாதர நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருவதே தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். அது மட்டுமல்லாமல் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள், சுப முகூர்த்த தினங்கள், விஷேசங்கள் அதிக அளவில் வருகிறது. இதனால், தங்கத்தின் தேவை என்பது அதிகரித்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை அதிகரிக்க தான் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் கிராம் ரூ.6 ஆயிரத்தை தொடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம் சவரன் ரூ.46 ஆயிரத்தை தாண்டியது: 3 நாளில் ரூ.920 எகிறியது; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Savaran ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தங்கம் விலை அதிரடி; ஒரே நாளில்...