×

தகாத உறவு விவகாரம்; காதலியின் கணவர் வெட்டிக்கொலை: டிராவல்ஸ் அதிபர் கைது


சேலம்: சேலம் அருகே தகாத உறவு விவகாரத்தில், காதலியின் கணவரை வெட்டிக்கொலை செய்த டிராவல்ஸ் அதிபர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீரகனூர் ரெட்டியார் தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (55). இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் திலீப் (28). இவர், திருப்பதியில் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் பாபு (23), டிரைவராக உள்ளார். செல்வம், மொத்தமாக வைக்கோல் வாங்கி இருப்பு வைத்து, அதனை விவசாயிகளுக்கு மாட்டுத்தீவனத்திற்காக விற்று வந்தார். இவரது நண்பர் செல்வராஜ் (58). இவர், வீரகனூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பேன்சி ஸ்டோர், டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.

இவரது கடையில் செல்வம் மனைவி சத்யா வேலை செய்து வந்தார். அப்போது சத்யாவிற்கும் செல்வராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இதனை செல்வராஜின் மனைவி தாரா கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாராவை கடந்த 2017ம் ஆண்டு செல்வராஜ் கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே செல்வம் தொழில் செய்வதற்காக செல்வராஜ் பண உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குடும்பத்தகராறில் செல்வத்தை விட்டு சத்யா பிரிந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக வாழப்பாடி பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

செல்வராஜ் அடிக்கடி சத்யாவை சென்று சந்தித்து வந்துள்ளார். இதனை அறிந்த செல்வம் அவரை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக செல்வராஜூடன் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வீரகனூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செல்வராஜின் பேன்சி ஸ்டோருக்கு அருகில் உள்ள தனது உறவினருக்கு சொந்தமான செருப்புக் கடையில் செல்வம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு சென்ற செல்வராஜ், திடீரென அரிவாளை எடுத்து செல்வத்தின் தலையில் வெட்டியுள்ளார். அதனை தடுக்க முயன்றதில் இரு கைகளிலும் வெட்டு விழுந்தது. இதில், மணிக்கட்டு துண்டாகியதில் செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அதனைக்கண்டு அங்கிருந்த உறவினரான விக்னேஷ் என்பவர் மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்து செல்வராஜ் தப்பினார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று செல்வத்தை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார். இதற்கிடையே செல்வராஜை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறுகையில், உன்னால் தான் எனது மனைவி பிரிந்து வாழ்கிறாள், அவள் திருந்தி வர நினைத்தாலும் நீ விடுகிறதில்லை என கூறி செல்வராஜிற்கு செல்வம் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக செல்வத்தை கொலை செய்ததாக செல்வராஜ் தெரிவித்துள்ளார் என்றனர்.

The post தகாத உறவு விவகாரம்; காதலியின் கணவர் வெட்டிக்கொலை: டிராவல்ஸ் அதிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED விஷம் குடித்த கணவர் சாவு மருத்துவமனையில் மனைவி தற்கொலை