×

சிபிஐ முன்பு இன்று ஆஜராகும் கெஜ்ரிவாலுடன் கார்கே பேச்சு: டெல்லி முழுவதும் போலீஸ் குவிப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் கெஜ்ரிவால் இன்று ஆஜராகிறார். இதனால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி அரசு அமல்படுத்தி, பின்னர் கைவிடப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதைத் தொடர்ந்து சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையும் இவரை கைது செய்துள்ளது. தற்போது இவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்ட போதே, இந்த மதுபான கொள்கை முறைகேட்டில் முக்கிய குற்றவாளி முதல்வர் கெஜ்ரிவால்தான் என்றுபா.ஜ குற்றம் சாட்டியது.

இந்நிலையில், மதுபான முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நேற்று முன்தினம் திடீரென சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்றுள்ள கெஜ்ரிவால், அதில் குறிப்பிட்டுள்ளபடி விசாரணைக்கு ஆஜராகப் போவதாக அறிவித்துள்ளார். இதனால், டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிபிஐ அலுவலகம், கெஜ்ரிவால் வீடு மற்றும் முக்கிய ஆம் ஆத்மி தலைவர்களின் வீடுகள் உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே சிபிஐ முன்பு இன்று ஆஜராக உள்ள கெஜ்ரிவாலுடன் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கே தொலைபேசியில் பேசியது பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை ஆம்ஆத்மி கைப்பற்றிய பிறகு முதன்முறையாக இருகட்சிகளும் தற்போது நெருங்கி வந்துள்ளன. இந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக காா்கே அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பொய் சொல்லும் சிபிஐ: கெஜ்ரிவால் ஆவேசம்
சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராக உள்ள நிலையில், கெஜ்ரிவால் கூறியதாவது: மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில் சிசோடியா தான் பயன்படுத்தி வந்த 14 செல்போன்களை உடைத்து அழித்து விட்டதாக, இதன் மூலம் ஆதாரங்களை அழித்து விட்டதாகவும் தங்களின் பிரமாண பத்திரத்தில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் கூறியுள்ளன. ஆனால், உண்மை வேறு. சிசோடியா பயன்படுத்தியதாக கூறப்படும் அந்த 14 செல்போன்களில் 4 செல்போன்கள், அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஒரு செல்போன் சிபிஐ.யால் கைப்பற்றப்பட்டு உள்ளது. மற்ற செல்போன்கள் அனைத்தும் எங்கள் கட்சியை சேர்ந்த பல்வேறு தன்னார்வலர்களால் இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உண்மைகள் அனைத்தும் சிபிஐ, அமலாக்கத்துறைக்கும் தெரியும். இருப்பினும், நீதிமன்றத்தில் தெரிந்தே பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post சிபிஐ முன்பு இன்று ஆஜராகும் கெஜ்ரிவாலுடன் கார்கே பேச்சு: டெல்லி முழுவதும் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Gharke ,Kejriwal ,CBI ,Delhi New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில்...