×

22 கிலோ கஞ்சாவுடன் சிக்கியவர்கள் தண்டனையில் இருந்து ‘எஸ்கேப்’ போலீஸ் பிடித்த 11 கிலோ கஞ்சாவை எலி தின்றதால் சிறையில் இருந்து 2 பேர் விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், எலி சாப்பிட்டது போக மீதமிருந்த 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால், இந்த வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மாட்டான்குப்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ராஜகோபால் மற்றும் நாகேஸ்வரராவ் ஆகிய இருவரை மெரினா போலீசார், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர். அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மெரினா போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ரபீக் பாபு ஆகியோர் ஆஜராகினர். அப்போது, அதில் 100 கிராம் கஞ்சாவை எடுத்து 50 கிராம் நீதிமன்றத்துக்கும் 50 கிராம் சோதனைக்காக செய்வதற்காக ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் வைத்திருந்த மீதமுள்ள 21.9 கிலோ கஞ்சாவில் 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக அதிர்ச்சி தகவல் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகையில் உள்ளபடி 21.9 கிலோ கஞ்சாவை தாக்கல் செய்வதற்கு பதிலாக குறைவான அளவில் கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்ததால் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். ஏற்கனவே, இதேபோன்று கோயம்பேடு காவல் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே அந்த வழக்கில் போலீசார் சமர்ப்பித்தனர். மீதமுள்ள கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

The post 22 கிலோ கஞ்சாவுடன் சிக்கியவர்கள் தண்டனையில் இருந்து ‘எஸ்கேப்’ போலீஸ் பிடித்த 11 கிலோ கஞ்சாவை எலி தின்றதால் சிறையில் இருந்து 2 பேர் விடுதலை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madras ,Chennai ,
× RELATED அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு...