×

ஓய்வு பெற்று 8 மாதமாகியும் அதிகாரப்பூர்வ வீட்டை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்:ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அவருக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லத்தை உடனடியாக காலி செய்து தருமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022 நவம்பர் முதல் 2024 நவம்பர் வரை பதவி வகித்தார். இவரது பதவி முடிந்து 8 மாதமாகிய நிலையிலும், தற்போதும் தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்திலேயே தொடர்ந்து தங்கி உள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திருத்த விதிகள் 2022 பிரிவு 3பி படி, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அதிகாரப்பூர்வ இல்லத்தில் அதிகபட்சம் 6 மாதங்கள் வரையிலும் தங்கியிருக்கலாம். சந்திரசூட்டுக்குப் பிறகு தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணா மற்றும் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இருவரும் ஏற்கனவே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவிலேயே தொடர்வதாக கூறி விட்டனர்.

இதனால், ஓய்வுக்குப்பிறகு துக்ளக் சாலையில் உள்ள 14வது பங்களா சந்திரசூட்டுக்கு ஒதுக்கப்பட்டாலும், தலைமை நீதிபதிக்கான கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள பங்களா எண் 5ல் 2025 ஏப்ரல் 30 வரையிலும் தொடர்ந்து வசிக்க அனுமதிக்குமாறு கடந்த ஆண்டு டிசம்பர் 18ல் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு சந்திரசூட் கடிதம் எழுதினார். சஞ்சீவ் கண்ணா ஒப்புதலைத் தொடர்ந்து மாதம் ரூ.5000 உரிமக் கட்டணம் செலுத்தி சந்திரசூட் தொடர்ந்து அதே பங்களாவில் வசித்தார். ஏப்ரல் 30க்குப் பிறகு மே 31 வரை அதே இல்லத்தில் தொடர்ந்து வசிக்க தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் சந்திரசூட் வாய்மொழி கோரிக்கை விடுத்தார். அப்போது இதற்கு மேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது என்ற நிபந்தனையுடன் ஜூன் 30 வரையிலும் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த கூடுதல் அவகாசம் முடிந்த பிறகும் சந்திரசூட் அதே பங்களாவில் வசிக்கிறார்.

எனவே சந்திரசூட் காலக்கெடு மற்றும் சட்ட கட்டமைப்பை மீறுவதை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்ற நிர்வாகம், ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு கடந்த 1ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளது. அதில், தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை தாமதமின்றி காலி செய்து கையகப்படுத்துமாறு அமைச்சக செயலாளருக்கு வலியுறுத்தி உள்ளது. இதற்கு முன் இது போல் முன்னாள் தலைமை நீதிபதி அரசு பங்களாவை காலி செய்ய உச்ச நீதிமன்றம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டதில்லை என்பதால் இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காலி செய்யாதது ஏன்?
முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் 2 மகள்களும் சிறப்பு குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு ஏற்றபடி துக்ளக் சாலை பங்களாவில் சில கட்டுமான மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் அதுவரையிலும் கிருஷ்ண மேனன் மார்க் பங்களாவிலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டுமென சந்திரசூட் முன்பு ஒன்றிய அரசிடம் கோரியிருந்தார்.

The post ஓய்வு பெற்று 8 மாதமாகியும் அதிகாரப்பூர்வ வீட்டை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்:ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Justice ,Chandrachud ,Supreme Court ,Union Government ,New Delhi ,Supreme Court… ,Dinakaran ,
× RELATED ரயில் டிக்கெட் முன்பதிவு நிலையை...