×

கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் கூறியதால் ஆத்திரம் பைக் ஷோரூம் ஊழியருக்கு வெட்டு: வாலிபர் உள்பட 5 பேர் கைது

பெரம்பூர்: பெரம்பூரில் கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் கூறிய ஆத்திரத்தில் பைக் ஷோரூம் ஊழியரை சரமாரியாக வெட்டிய வாலிபர் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் மரியநாயகம் முதல் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (38). இவர் அயனாவரத்தில் உள்ள பைக் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ரம்யா (30) என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரம்யாவுக்கும், அருணாச்சலம் என்ற அருண் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருண் மனைவி திவ்யா என்பவர் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்படி இருவரையும் அழைத்து பேசிய போலீசார் இரு குடும்பத்தினரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அருண் மனைவி திவ்யா அவருடன் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனசேகர் தனது வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அருண் உள்ளிட்ட 3 பேர், வீட்டுக்குள் புகுந்து ரம்யா எங்கே எனக் கேட்டுள்ளனர். அதற்கு தனசேகர், ரம்யா வீட்டில் இல்லை எனக் கூறியுள்ளார். உடனே அருண், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனசேகரை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் தனசேகர் மயக்கம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தலையில் 20 தையல்கள் போடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனசேகர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருவிக நகர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற அருண் (28), பெரம்பூர் தில்லைநாயகம் ஐந்தாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த தேவராஜ் (22), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்ற ஓணான் வினோத் (34), ஆகாஷ் (21), இமாம் ஜாபர் சாதிக் அலி (22) ஆகிய 5 பேரை நேற்று மதியம் கைது செய்தனர். இதில் அருணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனசேகரின் மனைவியுடன் தான் கள்ளத்தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை தனசேகர் தனது மனைவி திவ்யாவிடம் கொண்டுவந்து காண்பித்ததாகவும், அதனால் திவ்யா தன்னைவிட்டுச் சென்ற அந்த ஆத்திரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனசேகரை வீடு புகுந்து வெட்டியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அருண் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் கூறியதால் ஆத்திரம் பைக் ஷோரூம் ஊழியருக்கு வெட்டு: வாலிபர் உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Athram ,Perambur ,Perampur ,Dhanasekhar ,First Street, ,Perambur Marianayagam, Chennai ,
× RELATED உணவு டெலிவரி நிறுவனங்களின் சலுகை...