×

வன திருத்த மசோதாவுக்கு இந்தி, ஆங்கிலத்தில் கருத்து கேட்ட அறிவிப்புக்கு தடை

மதுரை: வன திருத்த மசோதாவுக்கு கருத்துக்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தெரிவிக்க வேண்டுமென்ற அறிவிப்புக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன்திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்:
‘‘ஒன்றிய அரசின் சார்பில் வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023 முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்குமாறு ஒன்றிய வனத்துறை செயலர் மற்றும் நாடாளுமன்ற செயலக இணை செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரியாதவர்களும் கருத்தை தெரிவிக்கும்வகையில் திருத்த மசோதாவை தமிழ் மொழியில் வெளியிடுமாறும், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை தமிழில் அனுப்ப அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் தனது கருத்தை தமிழ் மொழியில் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி ைவத்திருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு வழக்கறிஞர் ஜெய்சிங் ஆஜராகி, ‘‘நாடாளுமன்ற நடவடிக்கை அடிப்படையில் தான் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு கருத்துக்கள் கேட்கப்பட்டது’’ என்றார். மனுதாரர் வக்கீல் அழகுமணி, ‘‘நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவில் மாநில மொழிகள் தான் பேசுகின்றனர். எனவே, மாநில மொழிகளில் அறிவிப்பு வெளியிட்டு, கருத்துக்களை கேட்க வேண்டும்’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘மணிப்பூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வனப்பகுதியை ஒட்டி உள்ளவர்களாலும், மாநில மொழி மட்டுமே புரிந்தவர்களாலும் எப்படி மசோதா குறித்து அறிந்து கொள்ள முடியும்’’ என்றனர். பின்னர் ஒன்றிய அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்கள் கேட்டு வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஜூன் 16க்கு தள்ளி வைத்தனர்.

The post வன திருத்த மசோதாவுக்கு இந்தி, ஆங்கிலத்தில் கருத்து கேட்ட அறிவிப்புக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Igourd Branch ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை