×

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

*தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது

திருப்பூர் : திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் நேற்று தண்ணீரில் மூழ்கியது.கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆறு திருப்பூர், ஈரோடு வழியாக சென்று கரூரில் நிறைவடைகிறது. திருப்பூர் மாநகரில் சுமார் 13 கி.மீட்டர் நொய்யல் ஆறு பாய்கிறது.

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, கோவையில் நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்காலில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததன் காரணமாக திருப்பூர் மாநகரின் வழியே பாயும் நொய்யல் ஆற்றிலும் வழக்கத்தைவிட தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

நேற்று மேலும் நீர்வரத்து அதிகரித்ததால், திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

தொடர்ந்து நொய்யல் ஆற்றில் அதிகரித்து வரும் தண்ணீரின் அளவு குறித்து பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர். நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரிக்குமானால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: திருப்பூர் வடக்கு பகுதி 6, குமார் நகர் பகுதியில் 10.60, திருப்பூர் தெற்கு 6, அவிநாசி 8, பல்லடம் 9, உடுமலை 16, திருமூர்த்தி அணை 28, மடத்துக்குளம் 10.ஈரோடு: கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது.

நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. ஈரோடு நகரில் நேற்று காலை முதல் அவ்வப்போது விட்டுவிட்டு லேசான வெயில் அடித்தது.

நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரத்தின்படி, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்திருந்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: சென்னிமலை 1.80, பவானி 1, கவுந்தப்பாடி 2.20, வறட்டுப்பள்ளம் அணை 5.20, கோபி 3.20, எலந்தக்குட்டை மேடு 2, கொடிவேரி அணை 3.20, குண்டேரிப்பள்ளம் அணை 5.60, சத்தியமங்கலம் 2.30, பவானிசாகர் அணை 1.80, தாளவாடி 7.

The post திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Tirupur Noyyal River ,Tirupur ,Dampalayam ,Noyyal River ,Coimbatore district ,Erode ,Karur ,
× RELATED குமரி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை ரத்து