×

முதல்வருடன் மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான நிவாரணத்தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்துப் பேசினர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் குறித்தும், இதனால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 87 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 175 படகுகளையும் மீட்டுத்தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு தின உதவி தொகையாக தற்போது நாளொன்றுக்கு ரூ.250 வழங்கப்பட்டு வருவதை ரூ.350ஆக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் இரு தவணைகளில் 151 படகுகளின் உரிமையாளர்களுக்கு, விசைப் படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ.1.5 லட்சம் என மொத்தம் ரூ.6.74 கோடி நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படையினரால் 2018 முதல் 2023ம் ஆண்டு வரை கைப்பற்றப்பட்டு அங்கு நெடுங்காலமாக உள்ள 127 மீட்க இயலாத படகுகளுக்கு, குறிப்பாக விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாகவும், நாட்டுப் படகுகளுக்கு ரூ.1.5 லட்சம் என்பது ரூ.2 லட்சமாகவும் உயர்த்தி வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதனால் மீனவர்கள் ரூ.6.82 கோடி அளவிற்கு பயனடைவர். மேலும் பாம்பன் தூக்குப்பாலம் அருகே தூர்வாரும் கோரிக்கையினை ஏற்று தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

மேலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 87 மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள 175 படகுகளை நேரடியான நிலையான தூதரக நடவடிக்கை மூலமாக மீட்டுத்தரவும், கைப்பற்றப்பட்டுள்ள படகுகளை ஆய்வு செய்ய குழுவினரை அனுமதிக்கவும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீனவச் சங்கப் பிரதிநிதிகள் சந்திக்கவும் பிரதமர், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரையும் முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் நாடாளுமன்றத்தில் இப்பொருள் குறித்து பேசிடவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, விரைவில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் சந்திக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

மீனவர்களுடனான இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாஷா முத்துராமலிங்கம், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம், மீனவர்நலத்துறை செயலாளர் கோபால், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் கௌதமன், மீன்வளத்துறை இயக்குநர் கஜலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post முதல்வருடன் மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான நிவாரணத்தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : FISHERIES ASSOCIATION ,GOVERNMENT OF ,SRI LANKA ,M.O. K. Stalin ,Chennai ,Sri ,Lanka ,Sri Lankan government ,K. Stalin ,Ramanathapuram ,Pudukkottai ,Thanjavur ,Nagapattinam District Fishery Associations ,Tamil Nadu ,Chief Minister ,K. ,Stalin ,First Minister ,Government of Sri Lanka ,
× RELATED சினிமாவில் தோற்றதால் ஆன்மிக...