தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலாதலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலைப் பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்நிலையில், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர் விடுமுறை காரணமாக சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர். அங்குள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, அறிவியல் பார்க், தொங்கு பாலம், மயில் கூண்டு, முயல் கூண்டு, டைனோசர் பார்க், நீச்சல் குளம், முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 118.80 அடியாக உயர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு முழு கொள்ளளவு எட்டியது. இதையடுத்து அணைக்கு வரக்கூடிய உபரிநீர் ஒன்பது கண் மதகு வழியாக 266 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
