×

யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்: சர்ச்சை பேட்டியை ஒளிபரப்பிய சேனலை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக யூடியூப்பர் சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், யூடியூபர் சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி பெலிக்ஸ் ஜெரால்டு ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகநாதன், ‘சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என்று இதேபோன்ற வழக்கில் ஏற்கனவே பெலிக்ஸ் ெஜரால்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு அதனை மீறி தொடர்ந்து இப்படி பேசி வருகிறார்’ என்றார். பெலிக்ஸ் ஜெரால்ட் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘தனது பேச்சுக்கான விளைவை தற்போதுதான் உணர்ந்துள்ளதாகவும் இனி ஒரு போதும் அவ்வாறு பேச மாட்டேன்’ எனவும் ஜெரால்ட் உறுதி அளித்துள்ளார் என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, குற்றம் சாட்டப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சர்ச்சைக்குரிய வகையில் இனி நேர்காணல் அளிக்க மாட்டேன் என விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவரது சேனலை மூட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.

The post யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்: சர்ச்சை பேட்டியை ஒளிபரப்பிய சேனலை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bail ,YouTube ,Felix Gerald ,Court ,Chennai ,Shankar ,YouTuber ,
× RELATED உச்ச நீதிமன்ற யூடியூப் சேனல் முடக்கம்