×

விவசாயிகள், நடுத்தர மக்களைப் பாதிக்காத வகையில் ரூ.2 லட்சம் வரையிலான நகை கடன்களுக்கு கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும்

* முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை அடுத்து, ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய நிதியமைச்சகம் பரிந்துரை

* விதிகளை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை அமல்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தல்

புதுடெல்லி: விவசாயிகள், நடுத்தர மக்களை பாதிக்காத வகையில், ரூ.2 லட்சம் வரையிலான சிறிய நகைக்கடன்களுக்கு புதிய கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும், விதிகளை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை அமல் படுத்த வேண்டாம் எனவும், ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை அனுப்பியுள்ளது. நகைக்கடன் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசர பணத் தேவைக்கு கைகொடுப்பவை தங்க நகைகள்தான். நகையை அடமானம் வைத்து எளிதாக கடன் பெறலாம் என்பதால்தான், சாமானிய மக்கள் கூட நகை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், நகைக் கடன் வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி விடுத்திருந்த 9 புதிய வரைவு வழிகாட்டு விதிகள், சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அடமானம் வைக்கும் நகைகளுக்கு அதன் மொத்த மதிப்பில் 75 சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும். நகைக்கடன் வாங்குவோர், அடமானம் வைக்கும் நகைக்கு தாங்கள் தான் உரிமையாளர் என்பதற்கான ஆவணத்தைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

நகை வாங்கியதற்கான ரசீதை சமர்ப்பிக்கலாம். இல்லாவிட்டால், அதற்கு இணையான ஆவணம் அல்லது எழுத்துப்பூர்வ உறுதி மொழியை தர வேண்டும். ஒரு வேளை, நகையின் உரிமை மீது வங்கி அல்லது நிதி நிறுவனம் சந்தேகித்தால், நகைக்கடன் வழங்க மறுக்கலாம். எல்லா வித தங்கமும் அடமானத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நகைகள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்கள்தான் ஏற்றுக் கொள்ளப்படும். நகை என்ற பட்டியலில் வரையறை செய்யப்பட்டவை தவிர வேறு எதுவும் அடமானத்துக்கு ஏற்கப்பட மாட்டாது.

தங்க நாணயமாக இருந்தால் 50 கிராமுக்கு மேல் அடகு வைக்க முடியாது. அடமானம் வைக்கும் நகைக்கு 22 காரட் அடிப்படையில்தான் மதிப்பை கணக்கீடு செய்ய வேண்டும். உள்ளிட்டவை அந்த நெறிமுறைகளில் அடங்கும். இந்த விதிமுறைகள் சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இந்நிலையில் விவசாயிகள், நடுத்தர மக்கள், கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கும் நகைக்கடன் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 28ம் தேதி கடிதம் எழுதினார்.

அதில், விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதை தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் கவலை அளிக்கின்றன. தங்கத்தை பிணையாக பெற்று வழங்கப்படும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள், பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும்.

அதனால் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டு தங்கத்தை அடகு வைத்து வங்கி கடன்களை பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகள் எளிதாக கடன் பெறும் வழியை நேரடியாக குறைப்பதோடு, கடன் வாங்குபவர்கள் பெரும்பாலானோரை முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவதையும் குறைத்துவிடும். நகைக்கடன் பெறும் எளிமையான வழிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதால், கிராமப்புறங்களில் கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

மேலும், கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக, சிறிய அளவிலான விவசாய கடன்களுக்கு கடன் பெறும் திறனை ஆவணமாக மதிப்பீடு செய்யும் முறையானது கிராமப்புறச் சூழலில் செயல்படுத்த முடியாததாக இருக்க வாய்ப்புள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறையில் தடைகளை உருவாக்கலாம். எனவே, இந்திய ரிசர்வ் வங்கி (தங்க பிணையத்திற்கு எதிராக கடன் வழங்குதல்) வழிகாட்டுதல்கள் 2025-ல் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய இந்திய ரிசர்வ் வங்கிக்கு நிதி அமைச்சர் அறிவுறுத்த வேண்டும்.

நடைமுறையில் உள்ள கிராமப்புற கடன் வழங்குதலை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே, விவசாய சமூகத்திற்கும் கிராமப்புற பொருளாதாரத்திற்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் ஒன்றிய நிதியமைச்சர் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதே கருத்தை வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிச் சேவைகள் துறை, ரிசர்வ் வங்கிக்கு ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை நிதியமைச்சகம் ஆய்வு செய்தது. இந்த நெறிமுறைகள் சிறிய அளவில் நகைக்கடன் வாங்குவோரை பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.

எனவே, சிறிய அளவில் நகைக்கடன் வாங்குவோரை பாதிக்காத வகையில், அதாவது ரூ.2 லட்சத்துக்குக் கீழான நகைக்கடன்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் எளிதாகவும், விரைவாகவும் கடன் வாங்குவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்த வரைவு விதிகளை அமல்படுத்துவதை அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை ஒத்தி வைக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

The post விவசாயிகள், நடுத்தர மக்களைப் பாதிக்காத வகையில் ரூ.2 லட்சம் வரையிலான நகை கடன்களுக்கு கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Union Finance Ministry ,Reserve Bank ,New Delhi ,Dinakaran ,
× RELATED ரூ.85 லட்சம் கோடி திட்டங்கள் தேக்கம்...