×

நோய் தாக்குதல், செலவினங்களை கட்டுப்படுத்த இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம்

*வேளாண்துறையினர் அட்வைஸ்

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தொழு உரம் மற்றும் மண்புழு உரமிடுததால் நோய் தாக்குதல் மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.தேவதானப்பட்டி பகுதியில், மேல்மங்கலம், ஜெயமங்கலம்,

அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, நாகம்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, மருகால்பட்டி ஆகிய பகுதியில் பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. இதே போல் தேவதானப்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, செங்குளத்துப்பட்டி, சாத்தாகோவில்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் மஞ்சளாறுஅணை ஆற்றுப்பாசனம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.

நடப்பாண்டில் அவ்வப்போது மழை பெய்து, நல்லகருப்பன்பட்டி நாரணன்குளம் கண்மாய், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய், பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய், குள்ளப்புரம் கண்மாய், செங்குளத்துப்பட்டி செங்குளம் கண்மாய், கெங்குவார்பட்டி மத்துவார்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பி பாசன வசதி பெற்று வருகிறது. இந்த கண்மாய் பாசனப்பரப்பு மற்றும் நேரடி ஆற்றுப்பாசன வசதி பெறும் இடங்கள் ஆகியவற்றில் இரண்டாம் போகம் நேரடி நெல் விதைப்பு சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.

இது தவிர கிணற்றுப்பாசனம் மூலம் புஞ்சை நிலங்களில் பருத்தி, மக்காச்சோளம், வாழை, முருங்கை, கரும்பு, வெண்டை, தக்காளி, சாம்பார் பூசணி, கத்தரி, நூக்கல், பீட்ரூட், காலி ஃபிளவர், கொத்தமல்லி, முருங்கைபீன்ஸ், மற்றும் பூ வகைகளான சம்பங்கி, ரோஜா, சண்டுபூ, செவ்வந்தி உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, மானாவாரி சோளம், கம்பு, தட்டைபயறு, பாசிப்பயறு, மொச்சை, எள், கல்லுப்பயறு, கானம், இறுங்குசோளம், நாட்டுசோளம், உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பயிர் சாகுபடி நிலங்களில் பயிர்களுக்கு களையெடுப்பு, உரமிடுதல், மருந்து தெளித்தல் ஆகிய பணிகளை விவசாயிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பயிர்களுக்கு தேவையான ஆலோசனைகளுடன் தொழு உரம், ஆட்டுச் சாணம், கிடை மாட்டு தொழு உரம் மற்றும் மண் புழு உரம் ஆகியவற்றை பயிர்களுக்கு இட வேண்டும் என வேளாண்த்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

வேளாண் துறையினர் கூறுகையில், ‘‘சாகுபடி பயிர்களுக்கு ரசாயன உரமிடுதலால் மண் வளம் பாதிப்பு ஏற்படும். மேலும் பயிர்களுக்கு பூச்சி தாக்குதலை உண்டாக்கும். ரசாயன உரத்தினால் மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் இறக்க நேரிடும்.

பயிர் சாகுபடியில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு அதிகளவு செலவு ஏற்படுகிறது. அதிக செலவு செய்து பயிர்களுக்கும், மண்ணிற்கும் அதை பயன்படுத்தும் விவசாயிகளுக்கும் தீமைகள் தான் அதிகளவில் ஏற்படுகிறது.

அதே சமயத்தில் மாட்டுச்சாணம், கிடைமாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம் இட்டு நிலத்தை உழவு செய்து பின்னர் பயிர் சாகுபடி செய்தால் மண் வளம் பாதுகாக்கப்படும். தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு மண்புழு உரம், ஆர்கானிக் உரமிடுவதால் பயிர்கள் பாதுகாக்கப்படுகிறது.

பஞ்சகாவ்யம் மருந்து தெளிப்பு:

இதே போல் சாகுபடி பயிர்களுக்கு பூச்சி தாக்குதல், பயிர் போதிய வளர்ச்சி இல்லாமை, குறைந்தளவு பூ பூத்தல், குறைந்தளவு மகசூல் உள்ளிட்டவைகளால் விவசாளிகள் அதிகளவு செலவு செய்து, ரசாயன மருந்துகளை தெளிக்கின்றனர்.

மேலும் அதிக செலவு செய்து ரசாயன மருந்து தெளித்து குறைந்தளவு மகசூலை எடுப்பதால் விவசாயத்தால் விவசாயிகள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஆகையால் விவசாயிகள் பயிர்களுக்கு மண்புழு உரம் பயன்படுத்துதல், பஞ்சகாவ்யம் தெளிப்புமுறை பற்றி வேளாண்த்துறையினர் ஆலோசனை கேட்டு விவசாயிகள் குறைந்த செலவில் அதிக லாபம் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மண்புழு உரம் தயாரிப்பது எப்படி?

மேலும் வேளாண் அதிகாரிகள் கூறுகையில், மண்புழு உரம் அதிக அளவில் விற்பனைக்கு இருந்தாலும் அதன் அதிகபடியான விலையால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

சில்பாலின் பைகள் மண்புழு உரம் தயாரிக்கும் முறையை எளிதாக்கி அனைத்து விவசாயிகளும் தங்கள் விளை நிலங்களில் இருந்து கிடைக்கும் இயற்கைக் கழிவுகளையும், மண்புழுக்களையும் கொண்டு மண்புழு உரத்தை தயாரிக்கலாம். சிலிப்பாலின் தொட்டி அமைக்க 250 ஜி.எஸ்.எம் அளவிலான கனத்தை கொண்ட சிலிப்பாலின் பை தேவை. இதன் அளவு 12*4*2 அடியாக இருக்க வேண்டும்.

4 கிலோ எடையாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு அங்குலம் கனம் கொண்ட குழாய் அல்லது மூங்கில் சவுக்கு குச்சிகள் தேவைப்படும். சில்பாலின் தொட்டியின் அடிப்பகுதியில் தேங்காய் நார் அரை அடி உயர்த்திற்கு இருக்குமாறு நிரப்ப வேண்டும். இதில் தகுந்த அளவு ஈரப்பதம் உள்ளவாறு நீரினை தெளிக்க வேண்டும்.

இப் பையை மேல் புறத்தில் நிழல் வலை கொண்டு மூட வேண்டும். அறுவடை செய்யப்பட்ட மண்புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவீத ஈரப்பததில் சூரிய ஒளி படாதவாறு வைக்க வேண்டும். மண்புழு உரத்தை உற்பத்தி செய்து அவற்றைப் பயன் படுத்துவதுதான் சிறு மற்றும் குறு விவசாயிகளின் உற்பத்தி திறன் குறைவிற்கு ஒரு மாற்று வழியாகும். இதன்மூலம் 25 சதவீதம் ரசாயன உரச்செலவு குறைந்து அதிக உற்பத்தியும் கிடைக்கும் என தெரிவித்தனர்.

The post நோய் தாக்குதல், செலவினங்களை கட்டுப்படுத்த இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம் appeared first on Dinakaran.

Tags : Devadhanapatti ,Agriculture Department ,Melmangalam ,Jayamangalam ,Alagarnayakkanpatti ,Nallakaruppanpatti ,Nagampatti ,Silvarpatti ,Dinakaran ,
× RELATED தமிழக கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை: 8ம் தேதி முதல் கனமழை