×

கூட்டுப் பண்ணையில் சாதிக்கும் மதுரை நண்பர்கள்!

விவசாயம் என்றாலே இயற்கை விவசாயம்தான். அதுதான் நமது பண்டைக் கால விவசாய முறை. இயற்கை முறையில் விளைகிற பயிர்களை எந்த வித ரசாயனமும் இடாமல் அதன் போக்கிலே விளைவித்து பயனடைவதுதான் பழங்கால விவசாயம். அதைத்தான் நமது முன்னோர் செய்து வந்தனர். அப்படி செய்துவந்த விவசாயம்தான் இப்போது பல்வேறு ரசாயனத்தின் கூட்டுச் செயலாக மாறி இருக்கிறது. இப்போது இருக்கிற செயற்கை விவசாயம் மண்ணை மலட்டுதன்மையாக மாற்றி இருக்கிறது. அதற்கு காரணம், மழைநீர் இல்லாமை, பருவநிலை மாற்றம், விவசாயத்தில் லாப நஷ்ட வரவுகள் என அனைத்தும்தான். ஆனால், நம்மாழ்வாரின் தொடர் செயல்பாடுகளுக்கு பின்னால் பலருக்கும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகமாகி இருக்கிறது. இப்போது பலர் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி விட்டனர். உலகில் அனைத்து உயிர்களும் வாழ்வதும், இறப்பதும் இயற்கைதான். இந்த இயற்கையான வாழ்வில் இயற்கையான உணவுகளை சாப்பிடாமல் ரசாயனம் கலந்த உணவுகளை சாப்பிடுவதும், இனிவரும் தலைமுறையைச் சாப்பிடப் பழக்குவதும் இயற்கைக்கு புறம்பானது. அதனை எப்போதுமே செய்யமாட்டேன் என தீவிரமாக இருக்கிறார் மதுரையைச் சேர்ந்த விவசாயி பிரசாந்த்.

மதுரை மாவட்டம் உலகனேரி பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து கூட்டுப் பண்ணை முறையில் விவசாயம் பார்த்து வரும் பிரசாந்தை ஒரு காலைப் பொழுதில் சந்திக்க சென்றோம். பண்ணையில் செடிகளில் காய்கறிகளைப் பறித்துக் கொண்டிருந்த பிரசாந்தும், அவரது நண்பர்களும் புன்னகையோடு வரவேற்றனர். ‘‘விவசாயம் என்றால் அது இயற்கை முறையில்தான் இருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்துவருகிறேன்’’ என அதிரடி என்ட்ரி கொடுத்த பிரசாந்த், தொடர்ந்து பேசினார். ‘‘எனக்கு சொந்த ஊர் மதுரைதான். படித்து முடித்தவுடன் வேலை. ஐடியில்தான் பணி. அந்த நேரத்தில்தான் நம்மாழ்வார், பாமயன் போன்ற இயற்கை ஆர்வலர்களின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்து 2010ல் ‘மரம் மதுரை’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். அந்த அமைப்பின் நோக்கமே இயற்கை விவசாயம், நீர் மேலாண்மை, மரம் நடுதல் போன்ற விசயங்களை மேன்மைப்படுத்துவது தான். அதனால், என்னைப்போல ஆர்வம் கொண்ட இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வாலர்கள் என பலரையும் ஒன்றுதிரட்டி மதுரையில் பல இடங்களில் பல ஆயிரம் மரங்கள் நட்டோம். அதனைத் தொடர்ந்து நீர்நிலைகளை சுத்தம் செய்வது, நீர் மேலாண்மைக்கு உதவுவது என பல சுற்றுச்சூழல் சார்ந்த விசயங்களை கையில் எடுத்து அதை செம்மையாக செய்து முடித்தோம். அதன்பின் இயற்கை முறையில் விளைவிக்கிற காய்கறிகளை மக்களிடம் கொண்டு செல்வதை முன்னெடுத்தோம்.

அதாவது விவசாயிகளிடம் நேரடியாகக் காய்கறிகளை வாங்கி அதை மக்கள் வாங்கிப் பயனடையும் நோக்கில் சந்தைப்படுத்தத் தொடங்கினோம். சாதாரணமாக விவசாயிகளிடம் 5 ரூபாய்க்கு வாங்கப்படுகிற தக்காளி உள்ளூர் வியாபாரி, வெளியூர் வியாபாரி, கமிசன், சந்தை புரோக்கர் என அனைவரையும் தாண்டி மக்களுக்கு 20 ரூபாய்க்கு விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், நாங்கள் நேரடியாக விவசாயியிடம் சென்று அவர்கள் விற்கும் சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கி அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வேலையை செய்து வந்தோம். இதனால், விவசாயிகள் நல்ல முறையில் பயனடைவது மட்டுமில்லாமல் நல்ல பொருட்களை வாங்கிய திருப்தியும் மக்களுக்கு இருக்கும். அதேமாதிரிதான் எல்லா காய்கறிகளையும் அதாவது இயற்கை முறையில் பயிரிடப்படுகிற அனைத்து காய்கறிகளையும் வாங்கி சந்தைப்படுத்துவது போன்றவற்றை செய்து வந்தோம். இது எல்லாமே ஒரு கூட்டு முயற்சியில்தான் செய்துவந்தோம். அதன்பின் கொரோனா காலம் வந்தது. அந்த சமயத்தில் அனைத்து செயல்பாடுகளும் குறையத்தொடங்கி ஒரு கட்டத்தில் இல்லாமலே போனது. இப்போது இயற்கை விவசாயத்தை கையில் எடுக்கும் நோக்கத்தில் மீண்டும் பலபயிர்

சாகுபடிக்கு வந்திருக்கிறோம்.விவசாயம் செய்வதென்றால் முதலில் நிலம் வேண்டும். அதுவும் விவசாய நிலம் வேண்டும். அப்படி விவசாயம் செய்வதற்கு நிலத்தை தேடும்போதுதான் நண்பரின் நிலம் ஒன்று இருப்பது தெரிய வந்தது. அதுவும் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இல்லாமல் புதர் மண்டிய இடமாக கருவேலமரங்கள் சூழ்ந்து இருந்தது. பிறகு, குத்தகை முறையில் அந்த நிலத்தை வாங்கி முதலில் நிலத்தை சமன் செய்யத் தொடங்கினோம். மரங்களைப் பிடுங்கி, நிலத்தை சமன்செய்து ஓரளவிற்கு நிலத்தை தயார் செய்தபிறகு விவசாயம் செய்யத் தொடங்கினோம். அதுவரை எந்த விவசாயமும் செய்யாமல் இருந்ததால் எந்த ரசாயனமும் கலக்காத நல்ல மண்வளம் இருக்கிற இடமாக இருந்தது. அதுவே நாங்கள் விவசாயம் செய்ய ஏதுவாகவும் இருந்தது. இப்போது நாங்கள் ஐந்து பேர் கூட்டு முயற்சியில் விவசாயம் செய்து வருகிறோம். என்னோட ஜாபர், அலெக்ஸ் பாண்டியன், பாலாஜி, மதன் ஆகிய நண்பர்கள் சேர்ந்து இந்த இயற்கை வழி விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறோம். ஜாபர் முழுநேர விவசாயியாக இந்த பண்ணையை கவனித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து மற்ற நண்பர்கள் அனைவருக்குமே தனித்தனி தொழில் இருக்கிறது. போலீஸ், பெயின்டர், டைலர் என பல துறைகளில் வேலை செய்பவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் வந்து இப்போது ஒன்றாக சேர்ந்து இந்தப் பண்ணையை நடத்தி வருகிறோம்.

எங்கள் பண்ணை இருக்கும் இடம் முழுவதுமே செம்மண்தான். மொத்தம் 8 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். முதலில் விவசாயத்திற்கு தேர்ந்தெடுத்த நிலத்தில் நான்கு முதல் ஐந்து முறை நன்றாக உழுது மண்ணை இலகுவாக்கினோம். அதன்பின் தொழு உரமும், வேப்பம்புண்ணாகும் இட்டு மண்ணிற்கு தேவையான அடிஉரத்தை கொடுத்தோம். அதன்பின் ஒவ்வொரு பயிராக நடவு செய்ய ஆரம்பித்தோம். எங்கள் பண்ணையைப் பொறுத்தவரை எல்லாமே காய்கறிகள்தான். மொத்தம் 18 வகையிலான காய்கறிகள் பயிரிட்டிருக்கிறோம். செடி வகைகளான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காராமணி போன்றவற்றை பயிர் செய்திருக்கிறோம். அதனைத் தொடர்ந்து பந்தல் காய்களான அவரை, கொத்து அவரை, பீர்க்கங்காய், பாவக்காய், புடலை, சுரக்காய், கோவக்காய் போன்ற பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறோம். அதேபோல, வெங்காயமும் பயிரிட்டு இருக்கிறோம். வெள்ளரி, தர்பூசணி போன்ற வகைகளுமே நமது பண்ணையில் இருக்கிறது. இவை அனைத்தையும் இயற்கை முறையில்தான் பயிரிட்டு வருகிறோம். ஒவ்வொரு காய் கறியும் 40 சென்ட் அளவிற்கு பயிரிட்டு இருக்கிறோம். இயற்கை விவசாயம் செய்வதால் அனைத்து காய்கறிகளுமே கூடுதல் விளைச்சல் தருகிறது. எங்கள் பண்ணையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அனைத்து காய்கறிகளையும் அறுவடை செய்கிறோம். கத்தரிக்காய் மட்டுமே ஒரு அறுவடையில் 200ல் இருந்து 250 கிலோ வரை வருகிறது.

இப்போது வரை அனைத்து காய்களையும் சேர்த்து ஒரு அறுவடைக்கு 1000ல் இருந்து 1200 கிலோ வரை வருகிறது. இதற்கு காரணம் எங்கள் நிலத்தின் மண்ணும் இயற்கை முறை விவசாயமும்தான்.
பண்ணையில் பெரிய அளவில் ஒரு கிணறும் இருக்கிறது. இந்த கிணற்றில் இருந்துதான் அனைத்துச் செடிகளுக்கும் தண்ணீர் செல்கிறது. இந்த இடத்தில் நிலத்தடி நீர்மட்டம் நல்ல முறையில் இருப்பதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தாராளமாகவே கிடைக்கிறது. செடிகளுக்கு சொட்டுநீர்ப் பாசன முறையில் தண்ணீர் செலுத்துவதால் அனைத்து செடிகளுக்குமே சரியான ஒரே அளவிலான தண்ணீர் செல்கிறது. இதனால் மண்ணும் எப்போதும் குளிர்ந்த படியே இருக்கிறது. இங்கு விளைகிற காய்கறிகளை பெரும்பாலும் நேரடி விற்பனை முறையில் விற்று விடுகிறோம். அதுவும் பண்ணைக்கு வந்து வாங்கி செல்பவர்கள்தான் அதிகம். மதுரைக்கு நடுவில் இவ் வளவு பெரிய அளவில் ஒரு பண்ணை, அதுவும் இயற்கை முறையில் விளைவிக்கிற காய்கறிகள் எல்லாமே இங்கு வருபவர்களுக்கு ஆச்சர்யமாகவும், வியப்பாகவும் இருக்கிறது. அதைத் தாண்டியும் தங்கள் குழந்தைகளைக் கூட்டி வந்து பண்ணையை பார்வையிட்டு செடிகளை, காய்கறிகளை காண்பித்து, இயற்கை விவசாயம் குறித்து விளக்குகிறார்கள். இந்தக் கால குழந்தைகளுக்கு அதுவும் நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு செடிக்கும், கொடிக்கும் உள்ள வித்தியாசமே தெரியவில்லை. இப்படி நேரடியாக வந்து பார்வையிடும்போது குழந்தைகளுக்கு இதுகுறித்த தெளிவு கிடைக்கிறது. இங்கு வருபவர்கள் பெரும்பாலும் அவர்களே காய்கறிகளைப் பறித்து, அவர்களே எடை போட்டு வாங்கிச் செல்வார்கள். மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் இயற்கை அங்காடிகள், சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்துபவர்களும் பண்ணைக்கு நேரடியாக வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் விற்பனை முறையுமே சிறப்பாக இருக்கிறது.

பூச்சி விரட்டிகளுக்கு தீர்வு

செடிகளுக்குத் தேவையான நேரத்தில் சரியான பூச்சி விரட்டிகளையும், வளர்ச்சி ஊக்கிகளையும் தெளிக்க வேண்டும். எங்கள் பண்ணையைப் பொறுத்தவரை பூச்சிக்கொல்லிகள் கிடையாது. பூச்சிவிரட்டிகள் தான். அதாவது விவசாயத்தைப் பொறுத்தவரை இரண்டு வகையான பூச்சிகள்தான் இருக்கிறது. நன்மை பயக்கும் பூச்சிகள், தீங்கு தரும் பூச்சிகள். பயிர்களுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிகள் அனைத்தும் தீங்கு தரும் பூச்சிகள். தீங்கு தரும் பூச்சிகளை சாப்பிடும் பூச்சிகள் அனைத்தும் நன்மை தரும் பூச்சிகள். நமக்கு நன்மை தரும் பூச்சிகள்தான் தேவை. இந்த தீங்கு தரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக வேலிப் பயிர்களான தட்டான் பயறு, செண்டு மல்லி, ஆமணக்கு போன்றவற்றை பண்ணையைச் சுற்றி பயிரிட்டு இருக்கிறோம். மஞ்சள் கலரில் இருக்கிற அனைத்து விதமான பூவைப் பார்த்ததுமே கேடு தருகிற பூச்சிகள் அந்த செடிகளுக்கு சென்றுவிடும். இப்படி இனக்கவர்ச்சி முறையிலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். அதேபோல, ஆமணக்கு, தட்டான் பயிறு போன்றவற்றின் இலைகள் பெரிதாக இருப்பதால் தீங்கு தரும் பூச்சிகள் பெரிய இலைகளைத்தான் முதலில் சாப்பிடும். இதனால் காய்கறி பயிர்களுக்கு பூச்சித்தொல்லை இருக்காது.

வளர்ச்சி ஊக்கிகள்

செடிகளின் வளர்ச்சிக்கும், விளைச்சல் பெருக்கத்திற்கும் தேவையான வளர்ச்சி ஊக்கிகளை இயற்கை முறையில் பயன்படுத்துவதுதான் சிறந்தது. அதை தெளிப்பதன் மூலம்தான் நுண்ணுயிரிகள் பெருக்கம் அதிகமாகி மகசூலும் அதிகமாக கிடைக்கும். எங்களது பண்ணையில் இயற்கை முறையில் தயாரிக்கப்படுகிற வளர்ச்சி ஊக்கிகளைத்தான் தெளிப்பான் முறையிலும், சொட்டுநீர் முறையிலும் கொடுத்து வருகிறோம். அதாவது, பஞ்சகவ்யம், தேமோர் கரைசல், மீன் அமிலம், ஐந்திலைக் கரைசல் போன்ற கரைசல்களைத்தான் தெளித்து வருகிறோம். இதனால் பயிர்களும் சரி, விளைபொருட்களும் சரி முழுமையாகவும், விளைச்சல் அதிகமாகவும், எந்த விதமான தீங்கும் இல்லாமலும் மக்களைச் சென்றடைகிறது.

The post கூட்டுப் பண்ணையில் சாதிக்கும் மதுரை நண்பர்கள்! appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED மதுரை மாநகராட்சி தூய்மைப்...