×

பண்ணை விலை சரிந்ததால் வெளிமாநிலங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர் மற்றும் செவ்விளநீர் உள்ளிட்டவை, ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போது, சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தாண்டில் ஆகஸ்ட் மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையின்போது அந்நேரத்தில் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை குறைந்தது. அதன்பின் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மழை குறைவால் மீண்டும் இளநீர் விற்பனை சூடுபிடித்தது. இந்நிலையில், கடந்த மாதம் இறுதி மற்றும் இந்த மாதம் துவக்கத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்துள்ளது. இதனால், இளநீர் விற்பனை மந்தமாகி விலை சரிய துவங்கியது. பண்ணையில் ஒரு கிலோ இளநீர் ரூ.20ஆக சரிந்தது.

இதில், சென்னை சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்தபோதும், சுமார் ஒரு வாரத்துக்கு முன்பு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழையும், கடந்த சில வாரமாக பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவு காரணமாகவும், இளநீர் விற்பனை மந்தமானதுடன், ஒரு இளநீர் ரூ.18 ஆக சரிந்தது.
தற்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகரித்து சீதோஷ்ண நிலை மாற்றத்தால், உள்ளூர் பகுதியில் விற்பனை மந்தமானது. இதனால், கடந்த இரண்டு வாரமாக, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநில பகுதிக்கே லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. நாள் ஒன்றுக்கு வெளி மாநிலங்களுக்கு சுமார் மூன்றரை லட்சம் மதிப்பிலான இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆனைமலை வட்டார தென்னை விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சீனிவாசன் மற்றும் விவசாயிகள் கூறுகையில்,“தமிழகத்தில் கடந்த சில வாரமாக பனிப்பொழிவு மற்றும் சீதோஷ்ண நிலையில் மாற்றத்தாலும்,ஆங்காங்கே மழையாலும், இளநீர் விற்பனை என்பது தமிழகத்தில் சற்று குறைவானது. இதன்காரணமாக, தற்போது பெரும்பாலான இளநீர் சபரிமலை சீசனையொட்டி கேரளா மற்றும் ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி மந்தமாக இருப்பதுடன், விற்பனையும் குறைவால் பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.18க்கே நிர்ணயம் செய்யப்படுவதால், வெளிமாநில வியாபாரிகள் பலர் நேரடியாக வந்து இளநீரை கொள்முதல் செய்கின்றனர்’’ என்றார்.

The post பண்ணை விலை சரிந்ததால் வெளிமாநிலங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,
× RELATED கேரளாவிலிருந்து மீன் கழிவுநீரை...