- தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலை
- மத்திய அமைச்சர்
- நித்ன் கட்காரி
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- பி. வில்சன்
- ராஜ்ய சபா
புதுடெல்லி: தமிழ்நாட்டில் நடைபெற்றும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் காலதாமதமாக நடக்கிறது. இந்த திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு தான் முடிவடையும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் கேட்ட கேள்விகளுக்கு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில்: நில ஆர்ஜித், கொரோனா பெருந்தொற்று, புயல், அனுமதிகள் பெறுவது, மின்சார கேபிள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்டவற்றை இடமாற்றம் செய்வது, வழக்குகள், கான்டிராக்டர்களின் செயல்திறன் குறைபாடு காரணமாக பணிகள் தாமதமாகின்றன. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளில் முக்கிய திட்டங்களின் பணி நிறைவு தேதி காலதாமதமாகும். அதன் விவரம்: சென்னை- திருத்தணி- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை எண் 205ல் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் வேப்பம்பட்டு பைபாஸ், செவ்வாய்பேட்டை பைபாஸ் வரை 17 கி.மீ நீளத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் 20 தேதி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இதுவரை 47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இதனால், அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கி.மீ தூரத்துக்கு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி கடந்த 2022 மே மாதம் துவங்கியது. கடந்த மே 10ம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், 31 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதால் அடுத்த ஆண்டு ஜூலை 31ம் தேதி பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு வரை அமைக்கப்படும் விரைவுச் சாலைக்கான பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் 2024 ஜூலை 29க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் தாமதமாக நடந்து வருகவதால் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில்தான் பணிகள் முடிவடையும் நிலை உள்ளது. இதேபோல், பெரும்புதூர்- வாலாஜாபேட்டை இடையேயான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி தாமதமாகியுள்ளது. இதில், காரைப்பேட்டை வரையிலான 34 கி.மீ தூர பிரிவில் பணிகள் கடந்த 2019ல் துவங்கியது. பணிகளை 2021 மே மாதம் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. புதிய கான்டிராக்ட் விடும் பணிகள் இந்த மாதம் துவங்கும். காரைப்பேட்டையில் இருந்து வாலாஜாபேட்டை வரையிலான பணிகள் 2021 பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு பெறும்.
The post 2019ல் துவக்கப்பட்ட பணிகள் கூட இன்னமும் முடியவில்லை தமிழக தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் காலதாமதம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.