×

கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது, பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம். நம்மில் பெரும்
பாலானவர்கள் ஸ்ட்ரெஸ் நிறைந்த சூழலில்தான் வாழ்ந்து வருகிறோம். அதை குறைக்க தியானம், யோகா செய்கிறோம். சாதாரணமாக இருக்கும் நம்மில் பலருக்கு இந்தப் பிரச்னை இருக்கும் போது, ஒரு குழந்தையை கருவில் சுமந்து கொண்டு இருக்கும் பெண்கள் இதனை இரு மடங்காக அனுபவிப்பார்கள்.

மேலும் இன்று பலர் தனியாக வசித்து வருவதால், பிரீநேட்டல் மற்றும் போஸ்ட் நேட்டல் டிப்ரெஷனுக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு சின்னச் சின்ன பயிற்சிகள் மட்டுமில்லாமல், ‘நான் உடன் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை அளித்து வருகிறார். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மதுமதி. இவர் ‘ஆக்டிவ் பேபி பம்ப்’ என்ற பெயரில் கருவை சுமக்கும் தாய்மார்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குடிமங்கலம். பிரீநேட்டல் மற்றும் போஸ்ட்நேட்டல் பிட்னஸ் பயிற்சி அளித்து வருகிறேன். அதாவது, பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் சொல்லிக் கொடுக்கப்படும் பயிற்சிகள். மேலும் லேபர் மற்றும் பர்த் டூலாவாகவும் இருக்கேன். பிரசவம் என்பது ஒரு பெண்ணிற்கு மறுபிறவி என்பதால், அந்த நேரத்தில் ஒரு ஆதரவினை தேடுவார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருக்கும் காலம் முதல் குழந்தை பிறந்து அவர்கள் வீடு செல்லும் வரை உடன் இருப்பதுதான் டூலா கேர். இதனை டாக்டரின் அனுமதி பெற்று செய்வதால், அவர்களும் பாதுகாப்பாக உணர்வார்கள்.

இந்தப் பயிற்சியினை கர்ப்பம் தரித்த 13வது வாரத்தில் இருந்தே ஆரம்பிக்கலாம். இதில் அவர்களுக்கு பலவிதமான உடற்பயிற்சிகள் இருக்கும். பெரும்பாலும் டாக்டர் அனுமதி கொடுத்த பிறகு தான் அவர்களுக்கான பயிற்சியினை துவங்குவேன். ேமலும் அவர்களின் உடல் நிலைப் பொருத்து பயிற்சிகள் திட்டமிடப்படும். இந்தப் பயிற்சிகளை நான் நேரடியாக மட்டுமில்லாமல் ஆன்லைன் முறையிலும் அளித்து வருகிறேன். சில சமயம் குழந்தையின் தலை திரும்பாமல் இருப்பதாக டாக்டர் சொல்வாங்க. அதற்கான தனிப்பட்ட பயிற்சிகளும் அளிக்கிறேன்’’ என்றவர் தன் பிரசவ காலத்தில் ஏற்பட்ட சில மாற்றத்தால் இந்தப் பயிற்சியினை துவங்கியுள்ளார்.

‘‘நான் பரத நடனக் கலைஞர். பரதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் இருக்கிறேன். பரதக் கலைஞர் என்பதால் நான் கர்ப்பமாக இருந்த போதும் நடனம் பிராக்டீஸ் செய்வேன். அதற்கு முக்கிய காரணம் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதுதான். அதற்காக உடற்பயிற்சி, தியானம் எல்லாம் மேற்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்தது நடக்கல. அறுவை சிகிச்சை மூலமாகத் தான் குழந்தை பிறந்தது. இதனால் நான் மனதளவில் பாதிப்படைந்தேன். என்னுடைய உடலும் பலவீனமானது. எனக்கு ஏன் இப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சேன். ஆனால் மறுபக்கம் நான் பிரசவ நேரத்தில் செய்த உடற்பயிற்சிதான் சிசேரியனுக்கு பிறகும் என்னை ஆக்டிவாக இருக்க உதவியது.

அப்போது தான் உடற்பயிற்சி செய்ததால் ஏற்பட்ட பலன்களைப் புரிந்து கொண்டேன். எனக்கு கர்ப்ப காலத்தில் செய்யப்படும் உடற்பயிற்சி மேல் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. என்னுடைய அந்த அனுபவத்தை மற்ற பெண்களுக்கு ெகாடுக்க விரும்பினேன். எல்லாவற்றையும் விட நம் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டால், வாழ்க்கையை நிம்மதியாக கடக்க முடியும் என்பதையும் புரிந்துகொண்டேன்.

அந்த புரிதல்தான் என்னை டிப்ரஷெனில் இருந்து வெளியே கொண்டு வந்தது. அதைப் புரிந்து கொள்ளாமல் எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பிக்கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நாம் கடந்து போகும் சின்னச் சின்ன சந்தோஷ தருணங்களை ரசிக்க முடியாமல் போய்விடும். இதை ஒவ்வொரு பெண்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த துறைக்குள் வந்தேன். பயிற்சி குறித்து முறையாக கற்றுக் கொண்டேன்’’ என்று கூறும் மதுமதி கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவரித்தார்.

‘‘பொதுவாக பெண்கள் கரு தரிக்கும் போது அவர்கள் கர்ப்பப்பை குழந்தையை சுமக்க வேண்டும் என்பதற்காக விரிவடையும். இதனால் அவர்களின் வயிற்றுப் பகுதி தசையும் விரிவடையும். குழந்தைப் பிறந்த பிறகு ஒரு சில பெண்களுக்கு அது சாதாரண நிலைக்கு மாறும். அப்படி மாறாமல் இருப்பதை நாங்க Diastasis Recti என்று குறிப்பிடுவோம். அதனை உடற்பயிற்சி மூலமாக சரிசெய்ய முடியும். குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு அம்மாக்கள் உடனே உடல் எடையை குறைக்க விரும்புவார்கள்.

அப்படி இல்லாமல் 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். அப்பதான் பிரசவத்தின் போது உடலுக்குள் ஏற்பட்ட புண்கள் ஆறும். அதன் பிறகு அவர்கள் சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். அப்படி இல்லாமல் அவர்கள் உடல் எடையை குறைக்க அதிக அளவில் உடற்பயிற்சி மேற்கொண்டால் ஏற்கனவே பிரசவத்தால் தளர்ந்த தசையை மேலும் பாதிப்படைய செய்யும். பிரசவத்தின் போது, அவர்களின் கர்ப்ப வாய் பகுதி மற்றும் கர்ப்பப்பை விரிவடையும். அந்த சமயத்தில் அவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

அதை சமாளிக்கவும் எதிர்ெகாள்வதற்கும் சில பயிற்சிகள் உள்ளது. மேலும் கணவரும் தன் மனைவி உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் அவர்கள் மனைவிக்கு மனம் மற்றும் உடல் ரீதியாக எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சொல்லித் தருகிறேன். இதைத் தவிர நான் டூலாவாகவும் இருக்கிறேன். அதாவது பிரசவத்தின் வலி முதல் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வரை உடன் உறுதுணையாக இருப்பது. முதல் பிரசவம் என்னும் போது, பிரசவ வலி எப்படி இருக்கும் என்று தெரியாது. சிலருக்கு பனிக்குடம் உடையும், குழந்தையின் தலை திரும்பாது… அந்த நேரத்தில் அவர்கள் மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்களும் ஒருவித பதட்டத்தோடு இருப்பார்கள். டூலாவாக உடன் இருந்து அவர்களுக்கு தேவையான தைரியம் மற்றும் சின்னச் சின்ன பயிற்சிகள் கொடுப்பேன். உடற்பயிற்சிகள் செய்வதால், அவர்களின் இடுப்பு எலும்பு விரிவடைந்து குழந்தை எளிதாக பிறக்க உதவி
செய்யும்’’ என்றவர், என்ன பயிற்சிகளை அம்மாக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று விவரித்தார்.

‘‘பெண்கள் வேலைக்குச் சென்றாலும் உடல் உழைப்பு கிடையாது. ஒரே இடத்தில் அமர்ந்துதான் வேலைப் பார்க்கிறார்கள். அது உடலில் உள்ள தசைகள் இறுகச் செய்யும். அதனை சரி செய்ய ஸ்ட்ரெசிங் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். அதிக நேரம் அமர்ந்தோ அல்லது நின்று கொண்டு வேலைப் பார்த்தால் முதுகு வலி ஏற்படும். அதற்கான பயிற்சி வலியை குறைத்து அவர்களை ஆக்டிவாக செயல்பட வைக்கும். ஸ்க்வாட்ஸ், கை மற்றும் தொடையில் உள்ள தசைகளை வலுவாக்கும்.

இதைத் தவிர கார்டியாக் பயிற்சிகள், யோகாசனம், தியானம், சுவாசப் பயிற்சி, பாசிடிவ் சிந்தனைகளுக்கான பயிற்சிகளும் உண்டு. எல்லாவற்றையும் விட தினமும் வாக்கிங் செல்வது அவசியம். பிரசவத்திற்கு பிறகு (சுகப்பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை) அவர்கள் கண்டிப்பாக சுவாசப் பயிற்சி மேற்கொள்ளலாம். வீட்டிலேயே சின்னச் சின்ன வாக்கிங் செய்யலாம். மற்ற பயிற்சிகள் எல்லாம் எட்டு வாரங்கள் கழித்து தொடரலாம். இந்தப் பயிற்சிகள் அவர்களின் தசைகள் மற்றும் எலும்பு இரண்டையும் வலுவாக்கும். அது அவர்களுக்கு உடல்சோர்வு இருந்தாலும், அவர்கள் சுறுசுறுப்பாக இயங்க செய்யும்.

இதில் மிகவும் கவனிக்க வேண்டியது, குழந்தை பிறந்த பிறகு அவர்களை மட்டுமில்லாமல் குழந்தையையும் பராமரிக்கும் முறை. அதற்கான ஆலோசனையும் நாங்க வழங்கி இருந்தாலும், அவர்கள் தங்களின் குழந்தையினை புரிந்து கொள்ள சுமார் இரண்டு வாரங்கள் ஆகும். இதில் குழந்தை எத்தனை தடவை சிறுநீர் கழிக்க வேண்டும், தாய்ப்பால் கொடுக்கும் முறை, குழந்தையின் ஸ்லீப்பிங் பேட்டர்ன்களை புரிந்து கொள்வார்கள். உதாரணத்திற்கு குழந்தை ஒரு நாளைக்கு ஆறு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் சரியான முறையில் தாய்ப்பால் எடுத்துக் கொள்வதில்லை என்று புரிந்துகொள்ளலாம். அதற்கு ஏற்ப அவர்கள் தாய்ப்பாலினை கொடுக்க வேண்டும்.

மேலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்பதால் இரவு நேரத்தில் சரியான தூக்கம் தடைபடும். இந்த சமயத்தில் தாய்க்கும் உடல் சோர்வு ஏற்படும். ஆரோக்கியமான உணவு, குழந்தையுடன் நேரம் செலவழிக்க வேண்டும். ஒரு சிலருக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தும். போஸ்ட்பேட்ரம் டிப்ரெஷனுக்கு செல்வார்கள். அவர்கள் முறையான ஆலோசனை பெறுவது அவசியம். பெண்களுக்கு என்னுடைய ஆலோசனை அவர்கள் சின்ன வயசில் இருந்தே தங்களின் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். நடனம், உடற்பயிற்சி அல்லது ஏதாவது ஒரு விளையாட்டுப் பயிற்சி தொடர்ந்து மேற்ெகாள்ளலாம். இது முக்கால்வாசி பிரச்னைக்கு தீர்வளிக்கும்’’ என்றார் மதுமதி.

தொகுப்பு: ரிதி

The post கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED உணவுப் பொருட்களில் பூச்சி வராமல் இருக்க வேண்டுமா?