×

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு இந்தியாவில் அனுமதி: இனி 600 ஜிபி வேகத்தில் இணைய சேவை கிடைக்கும்

புதுடெல்லி: உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை பல நாடுகளில் வெற்றிகரமாக இருந்து வருகிறது. இந்தியாவின் டிஜிட்டல் துறையில் புதிய முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இந்திய தேசிய விண்வெளி புரமோஷன் மற்றும் அங்கீகார மையம், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கூட்டத்தை பயன்படுத்தி இணைய சேவை வழங்க அனுமதி அளித்துள்ளது. இந்தியாவின் தொலைதூர மூலைகளுக்கும் அதிவேக செயற்கைக்கோள் இணையத்தை கொண்டு வருவதில் இது ஒரு முக்கியமான படியாக இருக்கும். ஸ்டார்லிங்க் ஜென்1 சாட்டிலைட் என்பது 540 முதல் 570 கிமீ உயரத்தில் பூமியை சுற்றி வரும் 4,408 செயற்கைக்கோள்களை கொண்ட ஒரு உலகளாவிய செயற்கைக்கோள் கூட்டமாகும்.

இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் சுமார் 600 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவையை வழங்க முடியும். இதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் இணைய சேவை அருமையாக கிடைக்கும். அதிவேக இணைப்பு தேவைப்படும் நகர்ப்புற யூசர்களுக்கும்கூட இது உதவும். இந்த முடிவு அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு உள்கட்டமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்யும் என்றும் டிஜிட்டல் பிளவை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்லிங்க் சேவை மூலம் பல கோடி இந்தியர்களுக்கு, குறிப்பாக தரைவழி பைஃபர் இணைய உள்கட்டமைப்பு குறைவாக உள்ள அல்லது பைஃபர் சேவை இல்லாத பகுதிகளிலும் அதிவேக இணைய சேவை கிடைக்கும். இதன் மூலம் வீடுகள், வணிகங்கள், பள்ளிகளுக்கு தடையற்ற பிராட்பேண்ட் அணுகலை வழங்க முடியும்.

அதேநேரம் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு ஸ்டார்லிங்க் முழுமையாக இணங்க வேண்டும் என்றும் இதை உறுதி செய்ய ஸ்டார்லிங்க் செயல்பாடுகளும் அனைத்தும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்றும் இந்திய தேசிய விண்வெளி புரமோஷன் மற்றும் அங்கீகார மைய செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். செயற்கைக்கோள்கள் இப்போது உலகின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக மாறி வருவதால், இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த அனுமதியை தொடர்ந்து, சாட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

The post எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு இந்தியாவில் அனுமதி: இனி 600 ஜிபி வேகத்தில் இணைய சேவை கிடைக்கும் appeared first on Dinakaran.

Tags : India ,Elon Musk ,Starlink ,New Delhi ,National Space Promotion and Recognition Centre of India ,Starlink Satellite ,Dinakaran ,
× RELATED டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 275...