×

சரஸ்வதி பூஜை வழிபாடு..!!

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள்தான் சரஸ்வதி பூஜை. நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படுபவள் பிரம்மனின் துணைவி.சரஸ்வதி பூஜைக்கு முதல் நாளே குழந்தைகளின் பாடப்புத்தகங்கள், பேனாக்கள் ஆகியவற்றை ஒரு பலகையில் வைத்து மஞ்சள் துணியால் பாதி மூடியபடி போர்த்திவிட வேண்டும்.

வீடு, அலுவலகம், தொழில்நிலையம் ஆகியவற்றின் முகப்பில் வாழைக்கன்றுகள், மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும். சரஸ்வதி பூஜையன்று காலையில் சரஸ்வதி படத்தை அலங்கரித்து, விளக்கேற்றி பூஜை முறைகளை செய்ய வேண்டும். வெண்ணெய், பால், தயிர், பாகுவெல்லம், தேன், மோதகம், வடை, கதம்ப சாதம் ஆகியவற்றில் ஒன்றை தயார் செய்து படைப்பது நல்லது. அன்னைக்கு உகந்த மலர்களான செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரையில் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும். வாழை இலையில் பொரி, கடலை, அவல், நாட்டுச் சர்க்கரை, பழங்களை படைக்க வேண்டும்.

விநாயகர் முதல் கடவுள் என்பதால், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அவரை பூஜித்த பிறகே சரஸ்வதியை பூஜிக்க வேண்டும். கலசம் வைத்து பூஜித்தால், கூடுதல் நலன் கிடைக்கும். பூஜையின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். சகல கல்வி பாக்கியம் கிடைக்கும். சரஸ்வதி பூஜையின்போது ‘துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம’ என்று கூறி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

கலை மகளான சரஸ்வதியை வழிபடும் தினமான சரஸ்வதி பூஜையன்று மாலை கொண்டாடப்படும் விழாவே ஆயுதபூஜை. செய்யும் தொழிலே தெய்வம் என்ற புனித தத்துவத்தை உணர்த்தும் ஆயுதபூஜை அனைவராலும் கொண்டாடப்படுகிறது. நாம் செய்யும் தொழிலுக்கு உதவக்கூடிய ஆயுதங்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் சிறிய மற்றும் பெரிய தொழில் இயந்திரங்கள் முதல் எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து வண்ணம் தீட்டி, பொட்டு வைத்து பூஜைகள் செய்வது வழக்கம். பூஜை முடியும் போது ஆயுதங்களுக்கும் இயந்திரங்களுக்கும் எலுமிச்சம் பழங்களைச் சுற்றி அறுத்து குங்குமம் தடவிப் பிழிந்து கற்பூரம் ஏற்றப்பட்ட தேங்காயையும் குங்குமம் திணிக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காயையும் சுற்றி வாயிலில் போட்டு உடைப்பது போன்ற திருஷ்டிக் கழிப்புகளையும் தவறாமல் செய்ய வேண்டும்.

தொகுப்பு: பா.பரத், சிதம்பரம்.

The post சரஸ்வதி பூஜை வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Saraswati ,Saraswati Devi ,
× RELATED சாதி மறுப்பு திருமணம் செய்து...