×

டெல்லியில் நடந்தது அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: ஓ.பி.எஸ்சுடன் ஒட்டோ உறவோ கூடாது என்று வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.அப்போது, ஓ.பி.எஸ்சுடன் பாஜ ஒட்டோ உறவோ வைத்துக் கொள்ளக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ‘டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அறிவித்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார். அவருடன் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் வந்தனர்.

இதையடுத்து நேற்று மாலை டெல்லி வந்த எடப்பாடி பழனிசாமியை, அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இந்திராகாந்தி விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர். இதையடுத்து டெல்லி சாணக்கியாபுரியில் இருக்கும் அசோகா ஓட்டலில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருடன் சென்றிருந்தார். பின்னர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து 50 நிமிடங்கள் பேசினார்.

அப்போது அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அறிவித்தமைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஓ.பி.எஸ்சுடன் பாஜ ஒட்டோ உறவோ வைத்துக் கொள்ளக் கூடாது என்று அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக தெரிகிறது. பின்னர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்துள்ளனர். அப்போது பாஜவுக்கு ஒன்பது சீட் அதிமுக தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என அமித்ஷா தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டதாகவும், குறிப்பாக அமித்ஷா கேட்ட ஒன்பது சீட்டுகளில் நான்கு இடங்களை பாஜ விருப்பப்படி தருவதாகவும், மீதம் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை அதிமுக தரப்பில் ஒதுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் இந்த பதிலால் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிருப்தி அடைந்ததாகவும், அதிமுக- பாஜ இடையே 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

* அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்
இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிமுக-பாஜ கூட்டணி விவகாரத்தில் தேவையில்லாத கருத்துக்களை அவர் தெரிவிக்கிறார். அதேப்போன்று மறைமுகமாக ஊழல்வாதிகள் என்று தெரிவிக்கிறார். அதனால் எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான உத்தரவை பாஜ தலைமை அண்ணாமலைக்கு பிறப்பிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

The post டெல்லியில் நடந்தது அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: ஓ.பி.எஸ்சுடன் ஒட்டோ உறவோ கூடாது என்று வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Amit Shah ,Delhi ,OPS ,New Delhi ,Union Home Minister ,Baja Oto ,OPS… ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...