×

பிரதான வழக்கு நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி ரிட் மனுக்களை விசாரிக்கக் கூடாது: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம்

புதுடெல்லி: அதிமுக விதிமுறைகள் தொடர்பான பிரதான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்களை விசாரிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த இரு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,\”அதிமுகவின் புதிய விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை அங்கீகரிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இதைத்தவிர நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிரதீபா சிங் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இவ்விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை உரிய அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிக்க பத்து நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,‘‘ கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் வழக்கின் உத்தரவை தாமதிக்கக் கூடாது என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்,‘‘சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான பிரதான வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கை தற்போதைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணை செய்யக் கூடாது.

நாளை மறுநாள் (நாளை) சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வரக்கூடிய சூழலில் அதற்கு பிறகு தான் வேண்டுமானால் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கலாம் என தெரிவித்தார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,‘‘டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் உரிய அமர்வுக்கு இந்த வழக்கை தலைமை நீதிபதியால் மாற்றம் செய்யப்படும் எனக்கூறி, வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமை அதாவது நாளைக்கு ஒத்திவைத்தார்.

The post பிரதான வழக்கு நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி ரிட் மனுக்களை விசாரிக்கக் கூடாது: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Edabadi Palanisamy ,Delhi High Court ,New Delhi ,Edappadi Palanisamy ,Chennai High Court ,
× RELATED ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில்...