×
Saravana Stores

துவாக்குடியில் புதிய சுங்கச் சாவடிக்கு எதிர்ப்பு ஒன்றிய அரசை கண்டித்து வரும் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: துவாக்குடியில் புதிய சுங்கச் சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (நெ.சா.67), வாளவந்தான்கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியானது சுமார் 13 வருடங்களுக்கு மேலாக சுங்கக் கட்டணம் வசூல் மையமாக செயல்பட்டு வரும் நிலையில், துவாக்குடி முதல் ஜீயபுரம் வரையிலான 24 கிலோ மீட்டர் கொண்ட அரைவட்ட சுற்றுச் சாலையின் தொடக்கத்திலேயே, வாளவந்தான்கோட்டை சுங்கச் சாவடிக்கு அரை கிலோ மீட்டர் இடைவெளி கூட இல்லாமல், துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்படுவதை அறிந்து, மத்திய அரசு விதிகளின்படி அருகருகே இரண்டு சுங்கச் சாவடி அமைக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி அதிமுக சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதோடு, 60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் மூன்று மாதங்களுக்குள் அகற்றப்படும் என்று 2022ம் ஆண்டு மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது துறை அமைச்சர் கூறியதை மேற்கோள் காட்டி, மீண்டும் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரின் பார்வைக்கு கடிதம் எழுதி உள்ளதோடு, இக்கோரிக்கையை நிவர்த்தி செய்திட கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது சுங்கச் சாவடி பணிகள் முடிவுற்று பிப்.14ம் தேதிமுதல் சோதனை முறையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அரை கிலோ மீட்டருக்குள் இரண்டுமுறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களை நேரடியாக பாதிக்கின்ற வகையில், அரசு விதிகளுக்குப் புறம்பாகவும், மக்களவையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் மத்திய அரசையும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய நிர்வாகத்தை கண்டித்தும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தியும், அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், வரும் 23ம் தேதி வெள்ளிக் கிழமை மாலை 5 மணியளவில், துவாக்குடி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post துவாக்குடியில் புதிய சுங்கச் சாவடிக்கு எதிர்ப்பு ஒன்றிய அரசை கண்டித்து வரும் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Duvakkudi ,Union government ,Edappadi Palaniswami ,Chennai ,General Secretary ,Trichy-Tanjoi National ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்பை அகற்ற வந்தபோது...