×

2026ல் திமுக பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

சென்னை: 2026ல் திமுக பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரான மதுரையில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நேற்று) நடந்த திமுகவின் பெருமைக்குரிய பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம்.

இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவும்-தமிழ்நாட்டின் உரிமை மற்றும் வளர்ச்சிக்காகவும், இச்சிறப்புக்குரிய பொதுக்குழுவில் 27 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை செயல்படுத்திட, சிறப்பு தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்தார். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தது 30% வாக்காளர்களை 2 மாதங்களில் பூத் கமிட்டிகள் மூலம் திமுக உறுப்பினர்களாக்கிட நம் முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

கல்வியாளர் அணி – மாற்றுத்திறனாளிகள் அணி என கழகத்தின் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முடிவுகளும் எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம். திமுகவின் கொள்கைகள் – திராவிட மாடல் அரசின் சாதனைகளை அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் மக்களிடம் எடுத்துச் செல்வோம். நம் முதல்வரின் கரங்களை வலுப்படுத்தி, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்லச் செய்ய பொதுக்குழுவில் உறுதியேற்றோம். 2026ல் திமுக பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்.

The post 2026ல் திமுக பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு appeared first on Dinakaran.

Tags : Madurai general assembly ,DMK ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Madurai general ,Tamil Nadu ,Tamil Nadu… ,Deputy ,Chief Minister ,
× RELATED 2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு...