‘இன்ஸ்டா’ என்ற ஓர் வார்த்தைதான், இன்று இளசுகளின் இதய துடிப்பாக உள்ளது. காலையில் தூங்கி எழுவது முதல் இரவு தூக்கத்துக்கு செல்லும் வரை எல்லாவற்றையும் இன்ஸ்டாவில் பதிவிடுவதே இன்றைய இளைஞர்களின் ஒரே வேலையாக உள்ளது. காரணம், இன்ஸ்டாவில் பார்க்கும் வீவ்ஸ்களுக்கு ஏற்ப அக்கவுன்டில் பணம் வந்து சேருகிறது. வீட்டில் இருந்தபடியே விதவிதமான செயல்கள், சாகசங்கள் போன்றவற்றை வீடியோவாக எடுத்து பதிவு செய்து வருமானம் பார்த்து வருகின்றனர். பொழுதுபோக்கு, சாகசம், விற்பனை புரமோஷன் என பல்வேறு விதமான செயல்களுக்கு முக்கிய தளமாக அமைந்திருக்கிறது இன்ஸ்டா.
இதில் கிடைக்கும் லைக்குகள், வருமானம், பிரபலம் உள்ளிட்டவற்றுக்கு ஆசைப்பட்டு எல்லை மீறி ஆபாச பதிவு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பதிவு போன்ற பதிவுகளை இன்ஸ்டா இன்ப்யூலென்சர் செய்து வருகின்றனர். சமீபத்தில் டிடிஎப் வாசன் என்ற பைக் சாகச இன்ப்யூலென்சர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்து விபத்தில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இவரை பின்பற்றி இன்று ஏராளமான இளைஞர்கள் சாகசம் செய்து பிரபலம் அடைய வேண்டும் என்று நோக்கதோடு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு தீபாவளி அன்று டிரெண்டானதுதான் பட்டாசு வெடித்தபடி டிரைவிங் சாகசம். கோஸ்ட் ரைடர்களாக சாகசம் செய்த புள்ளிங்கோகளை போலீஸ் கொத்தாக தூக்கி, அவர்களது டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய பரிந்துரை செய்து உள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுமருதூர் மேம்பாலத்தில் ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர் தனது பைக்கின் முன்பகுதியில் வானில் வர்ணஜாலம் காட்டும் பட்டாசு கட்டி அதை பற்ற வைத்து வீலிங் செய்தபடி சாகசம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சாகசம் என்ற பெயரில் தங்களது உயிருக்கு மட்டுமல்லாமல் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்த இளைஞர் செயல்பட்டதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
இதுதொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் உதவி எண்ணுக்கும் (9487464651) புகார் சென்றது. அதன் பேரில் எஸ்பி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் தீபாவளியன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. ‘டெவில் ரைடர்ஸ்’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வதற்காக தஞ்சையை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் பைக் சாகசத்தை செய்ததும், வீடியோ எடுத்து பதிவிட்டது திருச்சி புத்தூர் கல்லாங்காட்டை சேர்ந்த அஜய் (20) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து அஜய்யை நேற்றுமுன்தினம் கைது செய்த நிலையில், மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.
இதுதவிர திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தலம் அருகே இரு சக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட எலமனூரை சேர்ந்த பர்ஷத் அலி(21), காணக்கிளியநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தச்சங்குறிச்சி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த ஊட்டத்தூரையை சேர்ந்த அஜித்(21), சிறுகனூரை சேர்ந்த அஜய்(20), தஞ்சாவூரை சேர்ந்த சக்திவேல்(20), விஜய்(18), லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்த அருள்முருகன்(24), கிரித்திஸ்(20), வசந்தகுமார்( 20), பெருமாள் (எ) தேசிங்க பெருமாள்(18), முகமது ரியாஸ் தீன்(22) ஆகிய 10 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் கூறுகையில்,‘‘ திருச்சி மாவட்ட பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் சாலையில் சாகசம் செய்தால் 9487464651 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தற்போது மக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் டூவீலரை ஓட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 12 பேரின் லைசென்ஸ்களை ரத்து செய்ய ஆர்டிஓ அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபட வேண்டாம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக instagram, x (Twitter), Facebook மற்றும் Youtube போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது சமூக வலைத்தள கண்காணிப்பு குழு மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களை பகிர்பவர்களை சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
இந்நிலையில், திருச்சியில் பைக்கில் வீலிங் செய்தும், பட்டாசுகளை கொளுத்தியபடியும் ஓட்டிய 7 பேரின் ஓட்டுநர் உரிமங்களை தகுதியிழப்பு செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தென்காசி: தென்காசி மாவட்டம் அச்சன்புதூர், இலத்தூர், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இளைஞர்கள் சிலர் பைக் மற்றும் கார்களில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், பிறர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் சாகசம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்தனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்த வடகரையை சேர்ந்த முகம்மது ஆசிக் (21), ஷேக் ஒலி (25) ஆகியோரை அச்சன்புதூர் போலீசாரும், புளியரையை சேர்ந்த கௌதம் கிருஷ்ணாவை (24) இலத்தூர் போலீசாரும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதேபோல் கலங்காதகண்டியைச் சேர்ந்த பரத்குமாருக்கு (26), மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக செங்கோட்டை போலீசாரால் ரூ.11,000 அபராதம் விதிக்கப்பட்டு அவரின் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் அச்சன்புதூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 18 வயதிற்குட்பட்ட 2 சிறுவர்கள் விதிமீறலுக்காக அவர்களின் பெற்றோர் முன்னிலையில் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் இருசக்கர வாகனத்தில் லைட் எரியும் பகுதியை சுற்றி பட்டாசை கட்டி வைத்து அதை எரியவிட்டு சாலையில் வீலிங் செய்து அந்த வீடியோவை அஜித்தின் ‘தீபாவளி தல தீபாவளி’ என்ற பாட்டுடன் சமூக வலைதளத்தில் சில இளைஞர்கள் வெளியிட்டு உள்ளனர். இந்த காட்சிகள் போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் இதுதொடர்பாக திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் மணிகண்டன்(28), சுஜின் (22) ஆகியோரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் பயன்படுத்திய பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
* கார் கதவில் அமர்ந்து மது குடித்தபடி இளைஞர்கள் உலா
ஈரோடு திண்டல் புற வழிச்சாலை பகுதியில் தீபாவளியன்று நள்ளிரவில் சொகுசு காரில் 3 இளைஞர்கள் பயணம் செய்தனர். அப்போது காரின் கண்ணாடியை திறந்து கதவின் மீது அமர்ந்து கொண்டு மது குடித்தபடி கையில் மது பாட்டில்களை வைத்து கொண்டு கூச்சலிட்டு சாலையில் வேகமாக வலம் வந்தனர். இதனை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து செல்போன்களில் இளைஞர்களின் அத்துமீறல்களை பதிவு செய்தனர். அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலானது. போலீசார் விசாரணையில், அந்த கார் ஓய்வுபெற்ற ஆசிரியர் வெள்ளியங்கிரிக்கு சொந்தமானது என்றும், அதை ஓட்டி வந்தது அவரது மகன் சேரன் (19), பீர் பாட்டிலுடன் தொங்கியபடியும், கதவில் அமர்ந்தபடியும் வந்தது ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த பூபதி மகன் ஜனா (19), ஈரோடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சந்திரன் மகன் கிரிதர் (19) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் மூவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிந்து, சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகனத்தை இயக்கியது (ரூ.10 ஆயிரம்), விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக ஓட்டியது (ரூ.1000), சீட்பெல்ட் அணியாதது (ரூ.1000), செல்போன் பேசியபடி செல்லுதல் (ரூ.1000), சரியான ஆவணங்கள் இல்லாதது (ரூ.500) ஆகியவற்றுக்காக ரூ.19,500 அபராதம் விதித்து, காரை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 இளைஞர்களையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
* காரின் சைலென்சரில் சரவெடியை வெடித்தபடி பறந்த ஜிம் பாய் கூட்டம்
சென்னை சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதியப்பட்ட வெள்ளை காரில் வரும் வாலிபர் ஒருவர், காரின் சைலென்சரில் சரவெடியை வைத்து பற்ற வைத்து ஓட்டி செல்கிறார். பின்னர், காரின் மேல் பகுதியில் வாணவேடிக்கை வெடித்தபடி வேகமாக ஓட்டி செல்கிறார். இந்த சம்பவம் சென்னை புறநகர் சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது போன்று தெரிகிறது. காரின் சைலென்சரில் பற்ற வைத்த பட்டாசு, டீசல் டேங்கில் பட்டிருந்தால் காரே வெடித்து இருக்கும். இந்த ஆபத்தை கூட உணராமல் லைக்குகளுக்காக உயிரை கூட துச்சமென நினைத்து சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காரின் பதிவெண்ணை வைத்து காரை ஓட்டியவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
The post தீபாவளியில் திடீர் டிரெண்டான பட்டாசு வெடித்தபடி டிரைவிங் சாகசம்: ‘கோஸ்ட் ரைடர்’களை கொத்தாக தூக்கிய போலீஸ்; திருச்சி எஸ்பி பரிந்துரைத்த 12 பேரில் 7 பேரின் லைசென்ஸ் அதிரடி ரத்து appeared first on Dinakaran.