×

தீபாவளி நெருங்குவதையொட்டி பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் ரூ.2.15 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தையில் நேற்று, தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி ரூ.2.15 கோடிக்கு கால்நடைகள் வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியில் உள்ள மாட்டுச்சந்தைக்கு, கடந்த புரட்டாசி மாதத்தில் மாடு வரத்து குறைவாக இருந்ததுடன், விற்பனை மந்தமானது. சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு கடந்த வாரம் நடந்த சந்தைநாளின்போது ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், விற்பனைக்காக அதிகளவு மாடுகள் கொண்டு வரப்பட்டன.

அதுபோல், நேற்று நடந்த சந்தைநாளின்போதும் வெளியூர் மாடுகள் வரத்து அதிகமானது. அதிலும், ஆந்திர மாநிலத்திலிருந்து எருமை மாடுகள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால், சுமார் 2500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

இதனால், கேரளா, மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் அதிகமாக வந்திருந்ததால் விற்பனை விறுவிறுப்பானதுடன், அனைத்து ரக மாடுகளும் கூடுதல் விலைக்கு விற்பனையாது. கடந்த வாரம் ரூ.35 ஆயிரத்துக்கு விலைபோன பசுமாடு ரூ.38 ஆயிரத்துக்கும், ரூ.35 ஆயிரத்துக்குள் விலைபோன காளை மாடு மற்றும் எருமை மாடுகள் ரூ.40 ஆயிரம் வரையிலும், ஆந்திர காளைமாடு ரூ.45 ஆயிரம் வரையிலும், கன்றுகுட்டி ரூ.18 ஆயிரம் வரையிலும் என, கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.2.15 கோடி வர்த்தகம் நடைபெற்றது.

இது குறித்து, மாட்டு வியாபாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சந்தைக்கு கடந்த சில வாரத்துக்கு பிறகு நேற்று கால்நடைகள் வரத்து அதிகமாக இருந்ததுடன், விற்பனையும் ஓரளவு இருந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். ஒவ்வொரு மாடும் கடந்த வாரத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த வாரம் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம் இருந்தது. ஆனால் நேற்று ரூ.2 கோடிக்குமேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளது’’ என்றனர்.

The post தீபாவளி நெருங்குவதையொட்டி பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் ரூ.2.15 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Diwali ,
× RELATED கேரளாவிலிருந்து மீன் கழிவுநீரை...