×

நோய்களை குணமாக்கும் பாரம்பரிய அரிசி உணவுகள்!

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கை குறித்தான கனவு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதே சமயம் நாம் யாரும் நம்முடைய உடல் நலன் மேல் அதிக அளவு அக்கறை கொள்வதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சிலர் நேரம் தவறாமல் சாப்பிடுகிறேன் என்பார்கள். ஆனால் அந்த உணவு நம்முடைய உடலுக்கு என்ன ஊட்டச்சத்துகளை அளிக்கிறது என்பது குறித்து நாம் கவலை கொள்வதில்லை. சில நேரம் நம்முடைய உடல் மந்தமாக சோர்வுடன் இருக்கும். உற்சாகம் குறைந்து காணப்படும். தூக்கமில்லாமல் அவதிப்படுவோம். விரக்தியான மனநிலை ஏற்படும். இவை எல்லாம் நோய்க்கான அறிகுறி. ஆனால் அது நமக்கு தெரிவதில்லை. இது ஏற்பட முக்கிய காரணம் நம்முடைய உணவு முறைகள்தான்.

‘‘நாம் சாப்பிடும் உணவுகளே நம்முடைய மனநிலையை தீர்மானிக்கின்றன. ஆரோக்கிய மனநிலைக்கு ஆரோக்கிய உணவு முறைகள் அவசியம். அதற்கு நாம் அனைவரும் நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய அரிசிகள் சாப்பிட்டாலே நம் உடலுக்கு பாதி ஊட்டச்சத்துகள் கிடைக்கும்’’ என்கிறார் சென்னையை சேர்ந்த சசிகலா. இவர் பாரம்பரிய அரிசியை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், காப்பகங்களில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாரம்பரிய உணவுகளை வழங்கி வருகிறார்.

‘‘சென்னைதான் என்னோட சொந்த ஊரு. படிச்சதெல்லாமே இங்கதான். எம்.பி.ஏ படிச்சேன். ஆனால் பட்டப்படிப்பு முடிச்சதும் நான் வேலைக்கு போகவில்லை. வீட்டிலும் திருமணம் பேசி முடிச்சாங்க. கல்யாணம், குழந்தைகள் என என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஒரு முறை என் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. டாக்டரிடம் காண்பித்த போது, குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக சொன்னார்.

இதனாலேயே அவனுக்கு உடலில் அவ்வப்போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. மாதா மாதம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாத்திரை மருந்துகள் சிகிச்சை என செலவு செய்தாலும், என் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு திறன்கள் மட்டும் அதிகரிக்கவில்லை. இதனால் வேறு என்ன செய்யலாம் என தேடிய போது, முதலில் யோகா வகுப்புகளுக்கு சேர்த்து விடச்சொன்னாங்க.

அவர்களுக்கு ேயாகா பயிற்சி அளித்தோம். அந்த சமயத்தில் தான் நம்முடைய பாரம்பரிய உணவு முறைகள் குறித்து தெரிந்து கொண்டேன். அந்த உணவுகள் எங்கு கிடைக்கும் என்று தேடிய போது, எங்க வீட்டிற்கு அருகே ஆர்கானிக் பொருட்களை விற்கும் கடை இருந்தது. அதில் பாரம்பரிய நெல் மற்றும் சிறு தானிய வகைகளில் செய்த லட்டு மாதிரியாக உருண்டையாக செய்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.

இந்த உணவு பொருட்களை எல்லாம் என்னுடைய குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க தொடங்கினேன். அவர்களும் விரும்பி சாப்பிட்டார்கள். மற்ற ஸ்னாக்சிற்கு பதிலாக இதையே அவர்களுக்கு ஸ்னாக்சாக கொடுத்தேன். அவர்கள் சாப்பிட துவங்கிய சில நாட்களிலேயே, அவர்களின் நோய் எதிர்ப்பு திறன் அதிகமானது. மருத்துவமனைக்கு செல்வது குறைந்து போனது’’ என்றவர் பாரம்பரிய ஸ்னாக்ஸ் உணவுகளை வீட்டிலேயே தயாரிக்க துவங்கியுள்ளார்.

‘‘என்னுடைய சிறுவயதில் வீட்டில் தான் ஸ்னாக்ஸ் தயாரிப்பாங்க. கடைகளில் விற்பதை வாங்கித்தர மாட்டாங்க. அம்மாவை பார்த்து நானும் இதனை செய்யக் கற்றுக் கொண்டேன். இப்போது என் குழந்தைகளுக்கு சிறுதானியங்களில் செய்து தருகிறேன். அவர்களின் உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. கண்முன்னால் நான் பெற்ற அனுபவத்தை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதற்கு முதல் படியாக என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் போது, கடைகளில் ஸ்வீட் ஸ்னாக்ஸ் வாங்காமல், பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியத்தில் செய்த ஸ்னாக்ஸ் வகைகளை கொடுக்க ஆரம்பித்தேன். அதோடு அந்த உணவு பொருட்களின் நன்மைகளை பற்றியும் நான் சொல்லுவேன்.

நாம் நம்முடைய பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து அதிக அக்கறை கொள்வதில்லை. அதற்கு முக்கிய காரணம் நாம் ஒரு உணவுப் பொருள் சுவையாகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறதா என்றுதான் பார்க்கிறோம். அதன் விளைவுதான் பாஸ்ட்ஃபுட் மோகம் நம்மை தொற்றிக் கொண்டது. இந்த வகை உணவுகளை சாப்பிடுவதால் நம்முடைய உடல் நிலைதான் பாதிக்கப்பட்டு பல பிரச்னைகளை சந்திக்கிறோம். ஆரோக்கியமான உடல் நலனுக்கு உணவு மிகவும் அவசியமானது. அதில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலே பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அதே சமயம் முறையான உணவுப் பழக்கத்தினை கடைபிடித்தால் பாதி பிரச்னைகள் தீர்ந்து விடும்.

முன்னோர் காலத்தில் பெரும்பாலான பாரம்பரிய அரிசி வகைகள் புழக்கத்தில் இருந்து வந்தன. காலம் மாற மாற நம்முடைய உணவுப் பழக்கமும் மாறியதால், அந்த அரிசிகளை நாளடைவில் விளைவிக்க தவறிட்டாங்க. இப்போது இவை அனைத்துமே அரிதானதாக மாறியிருக்கிறது. உதாரணமாக, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, இலுப்பை பூ சம்பா, பூங்கர், சிவப்பு கவுனி, கிச்சலி சம்பா, சிவன் சம்பா போன்றவற்றை நாம் சாதாரணமாக பயன்படுத்தும் அரிசி உணவுகளுக்கு பதிலாக சாப்பிடலாம்.

இதில் ஒவ்வொரு அரிசிக்கும் தனியாக சத்துகள் அடங்கியுள்ளன. மாப்பிளை சம்பா அரிசி ஆண்களின் மரபணுக்களுக்கு நல்ல ஊக்கத்தை கொடுக்கும். பூங்கர் அரிசி பெண்களுக்கு மாதவிடாய் நாட்களின் போது ஏற்படும் வலியை குறைக்கும். குறிப்பாக பி.சி.ஓ.எஸ் நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். இலுப்பை பூ சம்பா அரிசி பக்கவாதம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கருங்குருவை ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டால் நல்ல பலனை கொடுக்கும். தினமும் நின்று கொண்டே வேலை செய்யும் பெண்களுக்கு பாத குடைச்சல் போன்ற பிரச்னைகள் இருக்கும். அவர்களுக்கும் இந்த அரிசி நல்லது. இந்த வகை அரிசிகளில் கார்போ ஹைட்ரேட் இல்லை என்பதால், தினமும் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

பாரம்பரிய அரிசியினை சாப்பிட வேண்டும் என்று விரும்பும் பலருக்கு அதனை எவ்வாறு சமைப்பது என்பது குறித்து பல சந்தேகங்கள் இருக்கும். இந்த அரிசியை நன்றாக கழுவி 6 முதல் 8 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த தண்ணீரிலும் அதனுடைய சத்துகள் இருப்பதால் அதை கீழே கொட்டாமல் அதை அப்படியே சமைப்பதற்காக பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு டம்ளர் அரிசிக்கு நான்கு டம்ளர் தண்ணீர் விகிதம் சேர்க்க வேண்டும்.

பாரம்பரிய அரிசி வகைகளை சமைப்பதற்கு ஏற்றது மண்பானைதான். அதில் சமைக்கும் போது இதன் சுவை கூடும் மேலும் அரிசியும் எளிதில் வெந்திடும். இதுவே குக்கரில் செய்வதென்றால் 12 விசில் வரை வேக வைக்க வேண்டும். கஞ்சியாக செய்து குடித்தால் இன்னமும் நல்லது’’ என்றவர் வீட்டில் காப்பக குழந்தைகளுக்கும் பாரம்பரிய உணவு வகைகள் செய்து கொடுத்து வருகிறார். ‘‘ஆரம்பத்தில் என் குழந்தைகளுக்கு மட்டும் தான் பாரம்பரிய உணவுகளால் ஆன உணவினை சமைத்து கொடுத்து வந்தேன். பிறகு கடைகளுக்கும் கொடுக்கலாம் என்று அதனை உணவுகளாக செய்து விற்பனை செய்தேன். அதாவது கருப்பு உளுந்தில் இருந்து தட்டு வடைகள், மாப்பிள்ளை சம்பா அரிசி அதிரசம், பக்கோடா, பட்டர் முறுக்கு, கம்பு மைசூர் பாக் என விற்பனை செய்தேன். இதற்கு நான் கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணை தான் செய்து தருகிறேன்.

இது மட்டுமில்லாமல் தோசை மற்றும் இட்லி மிக்சும் செய்து தருகிறேன். ஆரம்பத்தில் நான் மட்டுமே இந்த உணவுப் பொருட்களை செய்தேன். ஆர்டர்கள் அதிகமாக நான்கு பெண்களை வேலைக்கு நியமித்திருக்கிறேன். தொடர்ச்சியாக உணவு பொருட்களை கடைகளில் கொடுக்கவே எனக்கான வாடிக்கையாளர்கள் அதிகரிக்க ஆரம்பிச்சாங்க. அப்போது என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர் பக்கத்தில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்திற்கு பாரம்பரிய உணவுகளை கொடுக்க முடியுமா என கேட்டார்.

குழந்தைகளுக்கு என்று கேட்டதும் நான் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் சம்மதித்தேன். அவர்களுக்கு கொடுக்க ேபான ேபாது அங்கு பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டோடு இருப்பதை கவனித்தேன். அன்று முதல் இந்த குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை பாரம்பரிய உணவுகளை கொடுக்க முடிவு செய்தேன். தெரிந்தவர்கள் ஸ்பான்சர் செய்ய முன் வந்ததால் அவர்கள் உணவுக்கான செலவினை ஏற்றுக் கொண்டனர்.

வாரம் வாரம் தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்ததால் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஸ்னாக்ஸ் வகைகள் மட்டுமில்லாமல், இட்லி, இடியாப்பம், கிச்சடி, சாம்பார் சாதம், தயிர்சாதம் போன்ற உணவுகளும் செய்து கொடுத்தேன். தொடர்ந்து இந்த வேலையை செய்வதற்காக நல்லறம் என்ற ஒன்றை தொடங்கியுள்ளேன். இதன்படி பாரம்பரிய அரிசிகள் குறித்த தகவல்களை கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளில் பேசி வருகிறேன். கருத்தரங்குகள் மூலம் பல மக்கள் நம்முடைய உணவு முறைகள் பற்றி தெரிந்து கொள்வது மட்டுமில்லாமல், அவர்களின் உணவு முறைகளை மாற்றிக் கொண்டால் உடலும் நலமாக இருக்கும்’’ என மகிழ்ச்சியோடு சொல்கிறார் சசிகலா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post நோய்களை குணமாக்கும் பாரம்பரிய அரிசி உணவுகள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,
× RELATED கேஸ் விலை உயர்வு… சிக்கனத்துக்கு சில வழிகள்!