×

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க எம்பிக்கள் சஸ்பெண்டை ஆயுதமாக்கி உள்ளது பாஜ: தன்கருக்கு கார்கே பதில் கடிதம்

புதுடெல்லி: ‘ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கவும், நாடாளுமன்ற நடைமுறைகளை நாசப்படுத்தவும், அரசியலமைப்பை சீர்குலைக்கவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்டை ஆளுங்கட்சி ஆயுதமாக்கி உள்ளது’ என மாநிலங்களவை தலைவர் கெஜதீப் தன்கருக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூனா கார்கே பதில் கடிதம் எழுதி உள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 146 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக நேற்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த வருமாறு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகார்ஜூனா கார்கேக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு கார்கே நேற்று அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கும், நாடாளுமன்ற நடைமுறைகளை நாசப்படுத்துவதற்கும், அரசியல் சாசனத்தை முடக்குவதற்கும் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதை ஆளும் கட்சி ஆயுதமாக்கி உள்ளது. சர்ச்சைக்குரிய மசோதாக்களை எதிர்ப்பின்றி நிறைவேற்ற திட்டமிட்டு வியூகம் வகுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். துரதிஷ்டவசமாக அவைத்தலைவரின் கடிதம், நாடாளுமன்றம் மீதான அரசின் எதேச்சதிகார மற்றும் திமிர்த்தனமான அணுகுமுறையை நியாயப்படுத்துகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் சமயத்தில், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உள்துறை அமைச்சர் அவையில் விளக்கம் தராமல் தொலைக்காட்சிக்கு பேட்டி தந்ததை அவைத்தலைவர் கண்டுகொள்ளவில்லை.

இதைப்பற்றி முடிவெடுப்பது மாநிலங்களவை தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றாலும், அமித்ஷா மற்றும் அரசின் அணுகுமுறையை அவைத்தலைவர் மன்னித்தது வருத்தமளிக்கிறது. சபையின் பாதுகாவலர் என்ற முறையில், மணிப்பூர், சீன எல்லை, நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு போன்ற விவகாரங்களில் அரசை விளக்கம் அளிக்க வைப்பதற்கான மக்களின் உரிமையை தலைவர் பாதுகாக்க வேண்டும். ஆனால், எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதால் விவாதம் இன்றி மசோதாக்கள் நிறைவேற்றுவதன் மூலம் அவை அலுவல்கள் எளிதாவதாக கருதுவது ஏமாற்றமளிக்கிறது. அவையை நடத்துவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என்றால், அவைத்தலைவரின் அறையில் நடக்கும் ஆலோசனையால் எந்த பலனும் இருக்க முடியாது. தற்போது நான் டெல்லியில் இல்லை என்பதால், திரும்பி வந்ததும் தங்களை சந்திப்பது எனது கடமை. இவ்வாறு கார்கே கூறி உள்ளார்.

The post ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க எம்பிக்கள் சஸ்பெண்டை ஆயுதமாக்கி உள்ளது பாஜ: தன்கருக்கு கார்கே பதில் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Karke ,Thankar ,BJP ,New Delhi ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த...