அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடந்த 36வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 49.3ஓவரில் 286 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 48.1 ஓவரில் 253 ரன்னுக்கு சுருண்டது. இதனால் 33 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3 விக்கெட் எடுத்த ஆடம் ஜாம்பா ஆட்டநாயகன் விருது பெற்றார். 7வது போட்டியில் 5வது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்திக்கொண்டது. இங்கிலாந்து 6தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன் டிராபிக்கு தகுதிபெற வேண்டுமென்றால் எஞ்சிய 2 போட்டியிலும்கட்டாயம் வெற்றிபெற வேண்டும்.
தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியதாவது: “இது நிச்சயமாக எங்களுக்கு வேதனை அளிக்கிறது. நாங்கள் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் இதை தான் தொடர்ந்து பேசி வருகிறோம். இன்றைய ஆட்டத்தில் கூட எங்களுடைய செயல்பாட்டில் சில முன்னேற்றம் இருந்தது. ஆனால் வெற்றி பெற அது போகவில்லை. நாங்கள் இந்தியாவுக்கு உலகக்கோப்பை தொடரில் விளையாட வரும் போது அதிக நம்பிக்கையுடன் வந்திருந்தோம். ஆனால் எங்களுக்கு கிடைத்திருக்கும் முடிவை பார்த்து மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. நிச்சயமாக வலிக்கிறது எங்களுடைய திறமைக்கு நாங்கள் நியாயம் சேர்க்கவில்லை. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையும்
வென்று விட்டு இப்படி ஒரு தோல்வியை தருவது மனது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எங்களுடைய ரசிகர்களை நாங்கள் ஏமாற்றி விட்டது போல் நினைக்கிறோம்.
ஆஸ்திரேலிய பேட்டிங் செய்யும்போது ஜாம்பா மற்றும் மிட்சல் ஸ்ட்ராக் பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம். அவர்களை விரைவில் வீழ்த்தி இருந்தோம் என்றால் நாங்கள் துரத்த வேண்டிய இலக்கு 30 ரன்கள் குறைந்திருக்கும். இந்த உலகக்கோப்பை தொடரில் என்னுடைய தனிப்பட்ட பேட்டிங் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. நான் நல்ல மனநிலையில் இந்த தொடரில் விளையாட வந்தேன். ஆனால் இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மீண்டும் பார்மை நோக்கி செல்ல வேண்டும் என்றால் தொடர்ந்து விளையாட வேண்டும். அதை தான் நாங்கள் செய்யப் போகிறோம், என்றார்.
The post 6வது தோல்வியால் கடைசி இடத்தில் நடப்பு சாம்பியன்; எங்களுடைய ரசிகர்களை ஏமாற்றி விட்டோம்: இங்கிலாந்து கேப்டன் பட்லர் வேதனை appeared first on Dinakaran.