×

மின்சார ரயிலில் சூட்கேஸில் எடுத்து வந்த சடலம் மீட்பு; நெல்லூர் பெண் 7 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டது அம்பலம்: துண்டு துண்டாக அறுத்து சூட்கேஸில் அடைப்பு


* தமிழ்நாட்டில் வீசிவிட்டு தப்பிச்செல்ல முயற்சி
* தந்தை, மகளை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை

சென்னை: மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் ரத்தம் சொட்ட சொட்ட பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, 7 பவுன் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தந்தை, மகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை ேசர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (46), நகை செய்யும் ஆசாரி. இவரது மகள் தேவி (18), கல்லூரி மாணவி. இவர்கள் இருவரும் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலில் நேற்று முன்தினம் பிற்பகல் புறப்பட்டனர். கையில் 2 சூட்கேஸ்களையும் வைத்திருந்தனர். இரவு 7.45 மணியளவில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் வந்து ரயில் நின்றது. உடனே இருவரும் சூட்கேஸ்களுடன் கீழே இறங்கினர். இரவு நேரம் என்பதால் சூட்கேஸை பிளாட்பார்மில் வைத்து விட்டு நைசாக நழுவி செல்ல முயன்றனர்.

அவர்களது நடத்தையில் சந்தேகமடைந்த ரயில்வே காவலர் ஒருவர் கண்காணித்தார். அவர்களை தொடர்ந்து சென்று பிடித்து விசாரித்தார். மேலும் அவர்கள் வைத்துவிட்டு சென்ற சூட்கேஸில் ஏதோ மர்மப்பொருள் இருப்பதை கண்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாரும், கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசாரும் விரைந்து வந்து மர்ம சூட்கேஸை திறந்து பார்த்தனர். அதற்குள் 65 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மற்றொரு சூட்கேஸில் தேவி கொண்டு வந்த பொருட்கள் இருந்துள்ளன. இதையடுத்து இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நெல்லூரில் இருந்து சூளூர்பேட்டை வந்து அங்கிருந்து ரயிலில் சூட்கேசுடன் சென்னை நோக்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில், ‘எனது மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

அவளை அப்பெண், விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்தார். எனது மகள் சம்மதிக்கவில்லை. இதுபற்றி என்னிடம் மகள் கூறியபோது ஆத்திரத்தில் அந்த பெண்ணை தாக்கினேன். அவர் இறந்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாததால் சடலத்தை எங்காவது கொண்டு போய் போட்டுவிடலாம் என நினைத்தேன். அந்த பெண் சடலத்தை துண்டுதுண்டாக வெட்டி, சூட்கேஸில் அடைத்தோம். பிறகு, ரயிலில் ஏறி சென்னைக்கு வர திட்டமிட்டோம். சூளூர்பேட்டையில் ரயிலில் ஏறினோம். ரயில் மீஞ்சூர் வந்தபோது, இங்கு இறங்கி சூட்கேஸை வைத்துவிட்டு சென்றுவிடலாம் என திட்டமிட்டோம். சூட்கேஸுடன் இறங்கி பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு, தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டுவிட்டோம்’ என்றார். இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் வி.கே.மீனா, கொருக்குப்பேட்டை இருப்பு பாதை காவல் உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொருக்குப்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து விசாரித்தார். மேலும் சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி கர்ணன் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்கள் தெரிய வந்தது. அதன் விவரம் வருமாறு: கொலை செய்யப்பட்ட பெண் நெல்லூரை சேர்ந்த மன்னம் ரமணி (65). இவர், பாலசுப்பிரமணியம் நடத்தி வரும் நகை பட்டறைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் பாலசுப்பிரமணியத்தின் வீட்டுக்கே சென்றுள்ளார். அப்போது, அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி என 7 பவுன் நகையை பாலசுப்பிரமணியம் பறிக்க முயன்றபோது மன்னம் ரமணி தடுத்துள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவரை அடித்து உதைத்து நகையை பறித்துள்ளார். இதை வேறு யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டியுள்ளார்.

சிறிது நேரத்தில் போலீசில் சொல்லி விடுவாரோ என அஞ்சி மன்னம் ரமணியை மீண்டும் பாலசுப்பிரமணியம் தாக்கியுள்ளார். இதில் அவர் இறந்து விட்டார். இந்த விவகாரம் ஆந்திராவில் தெரிந்தால் பிரச்னையாகி விடும் என கருதி பாலசுப்பிரமணியமும், தேவியும் சேர்ந்து பெண்ணின் உடலை துண்டுதுண்டாக அறுத்துள்ளனர். பின்னர் புதிதாக சூட்கேஸ், போர்வையை வாங்கியுள்ளனர். போர்வையில் உடலை சுற்றி, சூட்கேசில் அடைத்துள்ளனர். இதையடுத்து உடலை தமிழ்நாடு பகுதியில் வீசி விடலாம் என எண்ணி ரயிலில் வந்துள்ளனர். அப்போது மீஞ்சூரில் சிக்கிவிட்டனர் எனத் தெரியவந்தது. உண்மையிலேயே இந்த சம்பவம் நகைக்காகத்தான் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதாக என்ற சந்தேகத்திலும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மின்சார ரயிலில் சூட்கேஸில் எடுத்து வந்த சடலம் மீட்பு; நெல்லூர் பெண் 7 பவுன் நகைக்காக கொலை செய்யப்பட்டது அம்பலம்: துண்டு துண்டாக அறுத்து சூட்கேஸில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Nellore ,Tamil Nadu ,Chennai ,Meenchur train station ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...