×

இரவில் கரையை கடந்தது ரெமல் புயல் மேற்கு வங்கம், வங்கதேசத்தில் 9 லட்சம் பேர் வெளியேற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை

கொல்கத்தா: மேற்கு வங்காளம் மற்றும் வங்க தேசதிற்கு இடையே ரெமல் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக, வங்கதேசத்தில் 8 லட்சம் பேரும் மேற்கு வங்கத்தில் 1 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மத்திய வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ரெமல் புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை தீவிர புயலாக வலுப் பெற்றது.

இதனால் நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்கு வங்கத்தில் உள்ள சாகார் தீவுகளுக்கும், வங்கதேசத்தில் உள்ள கேப்புபாராவிற்கும் இடையே கரையே கடந்தது. புயல் கரையை கடக்கும் போது தரைக்காற்று மணிக்கு 110-120 கிமீ வேகத்திலும், அதிகபட்சம் 135 கி.மீ வேகத்திலும் வீசியது. இதனால், அண்டை நாடான வங்கதேசத்திலும், மேற்கு வங்க மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை பணிகள் முடக்கிவிடப்பட்டன.

கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் நேற்று பிற்பகல் 12 மணி முதல் இன்று காலை 9 மணி வரை மூடப்பட்டது. இதே போல மேற்கு வங்க மாநிலத்தின் கடலோர பகுதிகளில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ஹவுரா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்ட ரயில்களை தண்டவாளத்துடன் சேர்த்து இரும்பு சங்கிலியால் கட்டி பூட்டு போட்டனர். கடலோர மாவட்டங்களில் சாலை போக்குவரத்தும் பல இடங்களில் தடை செய்யப்பட்டது.

தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாஸ் மற்றும் புர்பா மெதினிபுர் மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் இருக்கும் என்பதால் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேற்கு வங்கத்தில் புயல் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 14 அணிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

இதே போல வங்கதேசத்தில் 19 மாவட்டங்களில் இருந்து சுமார் 8 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அங்கும் விமான, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ரெமல் புயல் முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் விளக்கினர்.

The post இரவில் கரையை கடந்தது ரெமல் புயல் மேற்கு வங்கம், வங்கதேசத்தில் 9 லட்சம் பேர் வெளியேற்றம்: பிரதமர் மோடி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Bangladesh ,PM Modi ,Kolkata ,Cyclone ,Central Bengal Sea ,Remal ,Modi ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு...