×

கடலூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. கல்லூரி மாணவர் உயிரிழப்பு: இழப்பீடு கோரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மறியல்..!!

கடலூர்: கடலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கேட்டும், கூடுதல் பேருந்துகளை இயக்க கோரியும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை கல்லூரியில் 2,500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து மாணவர்கள் சிலர் ஆட்டோவில் பயணம் செய்தனர். அப்போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த 3-ம் ஆண்டு கல்லூரி மாணவர் தமிழ்செல்வன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் நேற்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இன்று காலை மீண்டும் கல்லூரி தொடங்கியதும் வகுப்புகளை புறக்கணித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு கல்லூரி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்லூரி நேரத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்பட வில்லை என சகமாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மாணவர்கள் ஆட்டோ போன்ற பிற வாகனங்களில் சென்று விபத்தில் சிக்கும் நிலை உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மறியலில் ஈடுபட்ட மாணவர்களை மாவட்ட வருவாய் துறை அதிகாரி ராஜசேகர் சமரசம் செய்து வைத்தார். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். மேலும் நாளை முதல் கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதனையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவர் தமிழ்செல்வன் உயிரிழப்பை கண்டித்து நடந்த மாறியலால் தந்தை பெரியார் அரசு கலை கல்லூரிக்கு 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post கடலூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. கல்லூரி மாணவர் உயிரிழப்பு: இழப்பீடு கோரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மறியல்..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Govt Arts college ,Dinakaran ,
× RELATED கடலூரில் குப்பைகளை சரியாக அகற்றாத ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்