×

கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் 2023 – 2024ம் ஆண்டில் சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து உயர் அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம்..!!

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் 2023 – 2024 ஆம் ஆண்டில் சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து உயர் அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் இன்று (22.04.2023) காலை 11.00 மணியளவில் தலைமைச் செயலக கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் 2023-2024 ஆம் ஆண்டில் சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து உயர் அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் பேசியதாவது, இந்தியாவிற்கே ஒரு முன்னோடியாக தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் நடைபெற்று நேற்று முதலமைச்சர் அவர்களின் பதிலுரையுடன் முடிவுப் பெற்றுள்ளது. கூட்டுறவுத்துறை தொடர்பாக 2023 – 2024 ஆம் ஆண்டில் 44 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதனை துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விரைந்து செயல்படுத்துவதற்கு வேண்டி இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறை மூலமாக விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக இந்தாண்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி அளவிற்கு பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர்களிடம் சுமார் ரூ.21,000 கோடி வைப்பீடுகள் பெறப்பட்டு அதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் பலதரப்பட்ட கடன்களை வழங்கி சேவையாற்றி வருகிறது. குறிப்பாக சிறு வணிகர்களான சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ரூ.25,000த்திலிருந்து ரூ.50,000ஆக உயர்த்தி சிறு வணிக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாணவ மாணவியர்களின் நலன் கருதி எதிர்காலத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக சிறுசேமிப்புத் திட்டம் துவங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவது, வசூலிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தவிர்த்து முழுநேர வங்கியாக செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கூட்டுறவுத்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இச்சங்கங்கள் மூலம் 24 வகையான பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் நலிவடைந்து செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இலாபத்துடன் செயல்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். மேலும், கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் வணிக வங்கிகளை விட வாடிக்கையாளரின் வசதிற்கேற்ப நவினமாயமாக்கும் பணி மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தங்குதடையின்றி பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு 5584 நியாயவிலைக் கடைகளுக்கு ISO 9001 சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்தாண்டும் 5000 நியாயவிலைக் கடைகளுக்கு ISO 9001 சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை படிப்படியாக உயர்த்தி தமிழ்நாட்டில் செயல்படும் சுமார் 35000 நியாயவிலைக் கடைகளுக்கும் ISO 9001 சான்றிதழ் பெறப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஒரே வண்ணமான நியாயவிலைக் கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 40% நியாயவிலைக் கடைகள் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், ஊருக்கு ஒரு சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு வணிகர்களின் நலனைக் கருதி 5 கிலோ மற்றும் 2 கிலோ சிலிண்டர்கள் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் 5 கிலோ மற்றும் 2 கிலோ சிலிண்டர்கள் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தனியார் நிறுவனங்களில் அதிக அளவிலான தொழிலாளர்கள் குறிப்பாக வெளி மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே லாரி மூலமாக 5 கிலோ மற்றும் 2 கிலோ சிலிண்டர்கள் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கங்கள் மூலமாக சுமார் 350 கூட்டுறவு மருந்தகங்களில் 20% தள்ளுபடியில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்வது தடுக்கப்பட்டு வருகிறது. மாநில ஆள்சேர்ப்பு மூலம் சுமார் 4500 காலிப்பணியிடமான விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் ஆகியோர்கள் பணியமர்த்தம் செய்வதற்கு 4.25 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 3.50 இலட்சம் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பாக சில கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது வழக்கு நிலுவையில் உள்ளதால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வும், தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பணியாணையும் முறையாக வழங்கப்படும். இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அ.சங்கர் இ.ஆ.ப., மற்றும் உயர்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் 2023 – 2024ம் ஆண்டில் சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து உயர் அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Putapera ,Chennai ,Assembly Assembly ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...