×

அரசு ஒப்பந்த கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: அரசு ஒப்பந்த கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சுப்புராம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு அரசின் சாலை பணிகளை பல வருடங்களாக ஒப்பந்தம் அடிப்படையில் எடுத்து பணிகளை செய்து வருகிறேன். அதன் அடிப்படையில் கடந்த 2024 – 2025ம் ஆண்டிற்கான விலை நிர்ணய பட்டியல் கடந்த வருடம் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த வருடம் ஏப்ரல் 1ம் தேதி தமிழ்நாடு அரசு விலை நிர்ணய பட்டியலை வெளியிட்டு இருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை விலை நிர்ணய பட்டியல் வெளியிடவில்லை. இதனால் கடந்த ஆண்டு விலை நிர்ணயத் தொகை அடிப்படையிலேயே ஒப்பந்தம் செய்யப்படுவதால் ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு ஒப்பந்ததாரர்களுக்கான கட்டுமானப் பொருட்களின் 2025-26க்கான விலை நிர்ணயப் பட்டியலை வெளியிடக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரர் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி,

கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை ஏன் இதுவரை வெளியிடவில்லை? என கேள்வி எழுப்பினார். ஏப்ரல் மாதம் வெளியிட வேண்டிய விலை நிர்ணயப் பட்டியலை ஏன் இன்னும் வெளியிடவில்லை. சிமெண்ட், ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை ஏன் வெளியிடவில்லை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, உரிய நேரத்தில் விலைப்பட்டியலை வெளியிட்டால் தானே ஒப்பந்ததாரர்கள் விலை நிர்ணயம் செய்ய முடியும் என கூறினார். மேலும், அரசு ஒப்பந்த கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை 2 வாரங்களில் தமிழ்நாடு அரசு வெளியிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post அரசு ஒப்பந்த கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICOURT BRANCH ,Madurai ,Madurai branch ,High Court ,Suppuram ,Rajakopalapuram, Pudukkottai District ,Madurai Branch of ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு...