×

அரசியலமைப்பு முன்னுரையில் மதசார்பற்ற, சோசலிஸ்ட் வார்த்தைகள் நீக்கப்பட்டது ஏன்?: அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முதலாவது கூட்டத்தில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் நகல்களில் மதசார்பற்ற, சோசலிஸ்ட் வார்த்தைகள் இடம் பெறவில்லை.

இதுகுறித்து, மக்களவையில் காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று பிரச்னை எழுப்பி பேசுகையில்,‘‘ அரசியலமைப்பு முன்னுரை நகல்களில் மதசார்பற்ற மற்றும் சோசலிஸ்ட் வார்த்தைகள் மாயமாகியுள்ளன. மிக தீவிர பிரச்னையான இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட வார்த்தைகள் மிக தெளிவாக நீக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒன்றிய அரசின் நோக்கங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன’’ என்றார்.

சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறுகையில்,‘‘அரசியலமைப்பு சட்ட புத்தகம் தயாரான போது மதசார்பற்ற, சோசலிஸ்ட் ஆகிய வார்த்தைகள் இடம் பெறவில்லை. அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு பிறகுதான் அந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன’’ என்றார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறுகையில்,‘‘ இரண்டு வார்த்தைகளும்,1976ம் ஆண்டு அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பது எனக்கு தெரியும். யாராவது அரசியல் சட்ட புத்தகத்தின் நகலை இப்போது தந்தால் அதில் குறிப்பிட்ட 2 வார்த்தைகளும் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்களிடம் இருந்து இதயபூர்வமான பதில் இல்லை’’ என்றார்.

The post அரசியலமைப்பு முன்னுரையில் மதசார்பற்ற, சோசலிஸ்ட் வார்த்தைகள் நீக்கப்பட்டது ஏன்?: அரசுக்கு காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Congress ,Govt. New ,Delhi ,Dinakaran ,
× RELATED மதச்சார்பின்மை: ஆளுநருக்கு காங்கிரஸ் பதிலடி