×

செபி முன்னாள் தலைவர் மாதபி பூச் மீதான புகார்கள் ஆதாரமற்றவை: லோக்பால் அமைப்பு அறிவிப்பு

டெல்லி: செபி அமைப்பின் முன்னாள் தலைவர் மாதபி புரி பூச் மீதான புகார்களை முடித்து வைத்து லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது. பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை அதிகமாக காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவக்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றங்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் 2023ம் ஆண்டு குற்றம் சாட்டியது. இதனை செபி விசாரணை நடத்தி வந்தது. அப்போது செபி தலைவராக இருந்தவர் மாதபி புரி புச். இதைத் தொடர்ந்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், அதானி குழுமம் முறைகேட்டுக்கு பயன்படுத்திய நிறுவனங்களில் மாதபி மற்றும் அவரது கணவர் தாவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதை ஹிண்டன்பர்க் தெரிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டை மாதபி புரி பூச் மறுத்தார். இதனை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பிடம், மாதபி புரி பூச் மீது திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூவர் புகார் அளித்தனர். இந்தப் புகார்கள் தொடர்பாக 4 வாரங்களில் விளக்கமளிக்குமாறு மாதபி புரி பூச்க்கு கடந்த நவம்பரில் லோக்பால் உத்தரவிட்டது. இந்தப் புகார்களை கடந்த டிச.19ம் தேதி லோக்பால் அமைப்பு மேலும் பரிசீலனை செய்தது. அப்போது தனது விளக்கம் அடங்கிய பிரமாண பத்திரத்தை மாதபி புரி பூச் தாக்கல் செய்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபி அமைப்பின் முன்னாள் தலைவர் மாதபி பூச் மீதான புகார்கள் முடித்துவைக்கப்பட்டுள்ளதாக லோக்பால் அமைப்பு அறிவித்துள்ளது. மாதபி பூச் மீதான புகார்கள் யூகத்தின் அடிப்படையில் உள்ளது. குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, ஆதாரமற்றவை. சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் அடிப்படையில், புகார்கள் தகுதியற்றவை என கூறி மாதபி பூச் மீதான அடிப்படையற்ற புகார்களை தள்ளுபடி செய்து லோக்பால் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

The post செபி முன்னாள் தலைவர் மாதபி பூச் மீதான புகார்கள் ஆதாரமற்றவை: லோக்பால் அமைப்பு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sebi ,Madabi Booch ,Lokbal Organisation ,Delhi ,Madhabi Puri Boch ,Madafi Booch ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...