×

கூட்டு பலாத்காரம் நடந்ததாக கூறி தொடர் போராட்டம்; எனது மகளின் பெயர், புகைப்படங்களை பகிர வேண்டாம்: கொலையான பெண் மருத்துவரின் தாய், தந்தை உருக்கம்

கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி போராட்டங்கள் நடக்கின்றன. இதற்கிடையே தனது மகளின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கொலையான பெண் மருத்துவரின் பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் (31), பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீசிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது, போராட்டக்காரர்கள் போல மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்திய அவர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தினர். ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையை தாக்கிய மர்ம கும்பலைச் சேர்ந்தவர்களில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீஸ் தெரிவித்தது. மருத்துவமனையை தாக்கியதில் பாஜக, இடதுசாரி கட்சிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார்.

இதற்கிடையே பலாத்கார கொலையான பெண் மருத்துவரின் புகைப்படங்களை சிலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பெண் மருத்துவரின் தந்தை அளித்த பேட்டியில், ‘எனது மகளின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டாம். எனது மகளை இழந்துவிட்டேன்; உலகம் முழுவதும் நடந்து வரும் ‘ரிக்ளைம் தி நைட்’ போராட்டங்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே மகளின் பெயரைக் குறிப்பிட வேண்டாம்; எனது மகளின் சடலத்தைப் பற்றிய புகைப்படங்களைப் பகிர வேண்டாம்; தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்’ என்றார்.

தொடர்ந்து பெண் மருத்துவரின் தாயார் கூறுகையில், ‘சம்பவம் நடந்த அன்று காலை 10.53 மணிக்கு மருத்துவமனையின் உதவி கண்காணிப்பாளரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. எனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த பிறகு உடனடியாக எனது மகளின் உடலைப் பார்க்க முடியவில்லை. மாலை 3 மணியளவில் நாங்கள் மகளின் உடலை பார்த்தோம். கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருந்தோம். அப்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். மேற்குவங்கம் மட்டுமின்றி நாடு மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் போராட்டங்களை ஆதரிக்கிறோம். போராட்டக்காரர்கள் அனைவருக்கும் எங்கள் அன்பை தெரிவிக்கிறோம்’ என்றார்.

முன்னதாக, சிபிஐ இணை இயக்குநர் வி.சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், சோடேபூரில் உள்ள பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியது. அவர்களிடம் சிபிஐ குழு வாக்குமூலங்களை பதிவு செய்தது. கொல்கத்தா போலீசார், தங்களது விசாரணை தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் ஒரு குற்றவாளி மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரம் நடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கைதான சஞ்சய் ராயுடன் சேர்ந்து மேலும் சிலர் இந்த வழக்கில் தொடர்பில் உள்ளனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

30 பேருக்கு சம்மன்
சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘தங்கள் மகளின் பாலியல் பலாத்கார கொலையில் பலருக்கு தொடர்பு இருப்பதாக, பெண் மருத்துவரின் பெற்றோர் எங்களிடம் வாக்குமூலம் அளித்தனர். ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் தனது மகளுடன் பணிபுரியும் சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் பெயர்களையும் அவர்கள் எங்களிடம் கொடுத்தனர். குறைந்தது 30 பேரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். முதன்முறையாக சம்பவத்தன்று இரவு மருத்துவருடன் பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள், இரண்டு முதுகலை பயிற்சியாளர்களுக்கு (பிஜிடி) சம்மன் அனுப்பப்பட்டது. அதேபோல் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷூக்கும் சம்மன் அனுப்பப்பட்டது’ என்றனர்.

மாஜி முதல்வர் அலறல்
மருத்துவ மாணவி பலாத்கார கொலை சம்பவம் உறுதியான அடுத்த சில மணி நேரங்களில், மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ், தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர், தன் மீது சிலர் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.

The post கூட்டு பலாத்காரம் நடந்ததாக கூறி தொடர் போராட்டம்; எனது மகளின் பெயர், புகைப்படங்களை பகிர வேண்டாம்: கொலையான பெண் மருத்துவரின் தாய், தந்தை உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Kolkata ,
× RELATED பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில்...