×

‘சேவை பணி’ என்ற பெயரில் சிறுவாபுரி முருகன் கோயிலில் பணம் வசூலித்தவர்கள் வெளியேற்றம்: நிர்வாகத்திற்கு பக்தர்கள் பாராட்டு

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் சேவைப் பணி என்ற பெயரில் கோயில் நுழைவாயிலில் நின்று பக்தர்களிடம் பணம் வசூலில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால், கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் புகழ்பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 6 வாரங்கள் வந்து முருகப்பெருமானை வேண்டினால் வீடு வாங்குவது, திருமணம் முதலியவை நிறைவேறுவதாக ஐதீகம். அதனால் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இப்படி வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் சேவைப் பணி என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டு கோயில் நுழைவாயில் முன்பு பக்தர்களை கூட்டமாக நிறுத்தி வைப்பர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களும் விஐபிக்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திற்கும் அடிக்கடி புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து, கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்தை சுற்றிலும் எச்சரிக்கை விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. கோயிலில் சேவைப் பணி செய்து வந்த நபர்களும் வெளியேற்றப்பட்டனர். பக்தர்களை ஏமாற்றி பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாக பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் புரோக்கர் போன்றவர்களின் தொல்லைகள் இல்லாததால் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், தேவையற்ற நபர்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கோயிலுக்குள் உள்ள மூன்று நுழைவாயில்களிலும் போதிய காவலர்கள் இல்லை என பக்தர்கள் தெரிவித்ததுடன், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கூடுதல் காவலர்களை நியமித்து பக்தர்கள் எளிமையாக சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

The post ‘சேவை பணி’ என்ற பெயரில் சிறுவாபுரி முருகன் கோயிலில் பணம் வசூலித்தவர்கள் வெளியேற்றம்: நிர்வாகத்திற்கு பக்தர்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Siruvapuri ,Murugan temple ,Periyapalayam ,Siruvapuri Murugan Temple ,
× RELATED திருத்தணி கோயிலில் உணவு பாதுகாப்பு...