×

மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை, கிண்டி, தேசிய முதியோர் மருத்துவ மையத்தில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 975 இடங்கள் கொண்ட முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையினை வழங்கினார். பின்னர் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கினார்.

பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவில் 14.9 கோடி முதியவர்களில், தமிழ்நாடு அதிகமான முதியோர்களை கொண்ட 2வது மாநிலமாக இருக்கிறது. தமிழ்நாடு மக்கள் தொகையில் 13.7 சதவீதம் முதியோர்கள் உள்ளனர். இந்தியாவில் முதியோருக்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கிண்டி மருத்துவமனையில் தற்போது வரை 1,11,000 புறநோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் முதியோர் பராமரிப்பு உதவியாளர் எனும் 3 மாதகால சான்றிதழ் பயிற்சி படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 975 இடங்கள் கொண்ட முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பிற்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 11 மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு பொறுப்பு முதல்வர்கள் பணியில் இருக்கிறார்கள். தற்போது புதிய கல்லூரி முதல்வர்களை நியமனம் செய்வதற்கு 26 மருத்துவர்கள் அடங்கிய பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. எனவே விரைவில் கல்லூரி முதல்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma ,Subramanian ,Chennai ,International Day of Elderly ,National ,Elderly Medical ,Centre ,Tamil Nadu ,Ma. Subramanian ,Dinakaran ,
× RELATED நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக...