×

கோவை மாவட்டம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையிலான மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவை மாவட்டம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.481 கோடி மதிப்பீட்டில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே முதல் கட்டமாக 121 கோடி ரூபாய் செலவில் மேம்பாலமும், இரண்டாம் கட்டமாக 195 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்பாலமும் கட்டும் பணி நடந்தது. மொத்தமாக நில எடுப்பு பணிக்கு 152 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 481.95 கோடி ரூபாய் செலவில் இரு மேம்பால பணிகளும் நடத்தி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இந்த மேம்பாலத்திற்கு 47 மற்றும் 60 டெக்ஸ் லாப் அமைக்கப்பட்டது. ஏறு, இறங்கு தள பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உக்கடம் ஏறு தளம் 150 மீட்டர் நீளம், 8.45 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு ரோடு ஏறு தளம் 162 மீட்டர் நீளம், 8.20 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு ரோடு இறங்கு தளம் 144 மீட்டர் நீளம், 7.58 மீட்டர் உயரத்திலும் பொள்ளாச்சி ரோடு இறங்கு தளம் 140 மீட்டர் நீளம், 8.40 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டது. சுங்கம், வாலாங்குளம் ஏறு இறங்கு தளம் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

மேம்பாலம் கட்டும் பணி காரணமாக உக்கடம் ஆத்துப்பாலம், கரும்புக்கடை, போத்தனூர் ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. கனரக வாகனங்கள், புட்டு விக்கி ரோடு வழியாக சுமார் 3 கி.மீ தூரம் திருப்பி விடப்பட்டிருந்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல சுமார் 25 நிமிடங்களாகி வந்தது. மேம்பாலம் திறக்கப்பட்டால் 5 நிமிட நேரத்தில் 3.8 கி.மீ தூரத்தில் உள்ள மேம்பாலத்தை எளிதில் கடக்க முடியும். அனைத்து ரக வாகனங்களும் மேம்பாலத்தை எளிதாக பயன்படுத்த முடியும். கடந்த 6 ஆண்டாக நடந்து வந்த மேம்பால பணி முடிவு பெற்றதால் கோவை பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் வாகனங்கள் எந்த நெருக்கடியும் இன்றி விரைவாக சென்று வர முடியும்.

 

The post கோவை மாவட்டம் உக்கடம் – ஆத்துப்பாலம் இடையிலான மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Ukadam ,-Athupalam ,Goa district ,K. Stalin ,KOWAI ,KOWAI DISTRICT ,UKADAM-ATHUPALAM ,Ukadam-to-Athapalam ,Ukkadam ,Pollachi ,Palakkad ,Dinakaran ,
× RELATED புதிய முதலமைச்சர் யார்…? காத்திருக்கும் டெல்லி மக்கள்!