×

கோவை மாநகராட்சி கூட்டத்தில் பாதாள சாக்கடை, குடிநீர் கட்டண இணைப்பு தீர்மானம் ஒத்திவைப்பு

*2 அதிமுக கவுன்சிலர்கள் 2 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட்

கோவை :கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்கினார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநகரில் 100 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மொத்தம் 93 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் துவங்கியவுடன் மேயர் ரங்கநாயகி பேசும்போது, அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் எழுந்து நின்று முதலில் நாங்கள் பேசுவோம் என கூறினார். அப்போது அவர் சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் கட்டிடக்கழிவுகளை கொட்டுவதற்காக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த இடத்தில் கட்டிட கழிவுகளை கொட்டக்கூடாது என அவர் தெரிவித்தார். அப்போது, மாநகராட்சி மண்டல தலைவர்கள் மீனா லோகு (மத்திய), இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் (கிழக்கு), கதிர்வேல் (வடக்கு) மற்றும் திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஊடக வெளிச்சத்துக்காக அதிமுக கவுன்சிலர் ஒவ்வொரு கூட்டத்திலும் இதுபோல் தன்னை முன்னிலைப்படுத்தி பேசுகிறார். இதனால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, வரிசைப்படி பேச அனுமதிக்க வேண்டும்.

அதிமுக கவுன்சிலர் அவரது முறை வரும்போது பேசினால் சரியாக இருக்கும் என திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. மேயரும் அதிமுக கவுன்சிலருக்கு வாய்ப்பு அளிக்கும் போது பேச வேண்டும் என கூறினார்.

இந்நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மேயர் இருக்கையின் அருகே எழுந்து சென்று உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாதம் கட்டணம் நிர்ணயம் செய்தது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்கள் மன்ற கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்திய நிலையில், மாநகராட்சி மேயர் அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோரை 2 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்தார்.

மேலும், கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த மன்ற கூட்டத்தில் பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணம் ஆகியவை தொடர்பான மூன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

இதில், வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணம் ஆகியவை கட்டிடத்தின் பரப்பளவு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, கட்டணத்தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு அந்த சமயத்திலேயே கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த தீர்மானங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியின் கவுன்சிலர்கள் எழுந்து தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது, மேயர் ரங்கநாயகி தீர்மானம் 101, 102, 103 ஆகிய மூன்று தீர்மானங்களும் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தீர்மானங்கள் தொடர்பாக அமைச்சரிடம் கலந்து பேசி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், திமுக மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பேசுகையில்: ‘‘அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்.

செம்மொழி பூங்காவில் மேம்பாட்டு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு கலைஞர் கருணாநிதியின் சிலை வைக்க வேண்டும். அவருக்கு ஒரு மண்டபம் வைக்க வேண்டும்’’ என்றார். இதற்கு திமுக கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்து பேசினர்.

15-வது வார்டு கவுன்சிலர் சாந்தாமணி பேசுகையில்: ‘‘சுப்பிரமணியம்பாளையம் சாலையோரத்தில் மருத்துவ கழிவுகளை மூட்டைகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இவர்களை கண்டறிந்து மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

வார்டில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. பாதாள சாக்கடை பணி முடிந்த நிலையில் சாலையில் உள்ள மண்ணை முறையாக எடுப்பதில்லை. இதனால் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. கே.என்.ஜி புதூர் முதல் கணுவாய் வரையிலான இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’’ என்றார்.

72-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் பேசும்போது: ‘‘இஸ்லாமிய, கிறிஸ்துவ சமுதாய மக்களின் மயானங்களை மாநகராட்சி நிதியில் சீரமைக்க வேண்டும். செம்மொழி பூங்காவில் கவுன்சிலர்கள் 100 பேரும் சேர்ந்து 100 மரக்கன்றுகள் நட வேண்டும்’’ என்றார்.

தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, பூங்கா டெண்டர் எடுத்தவர்கள் சரியாக வேலை செய்வதில்லை என தெரிவித்த நிலையில், மாநகராட்சி கமிஷனர் அவர்களது டெண்டர் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், மாநகராட்சி சாலை பணிக்காக கூடுதலாக ரூ.90 கோடி கேட்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

The post கோவை மாநகராட்சி கூட்டத்தில் பாதாள சாக்கடை, குடிநீர் கட்டண இணைப்பு தீர்மானம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore Corporation ,AIADMK ,Coimbatore ,Coimbatore Corporation Council ,Victoria Hall ,Mayor ,Ranganayaki ,Sivaguru Prabhakaran ,Dinakaran ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...