சென்னை: கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் குறும்படத்தையும் அவர் பார்வையிட்டார்.
5 முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமன்றி, இந்திய அரசியலின் திசையை தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் கலைஞர். அவரது பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும், சமுதாயத்தில் அதன் தாக்கத்தையும் வருங்காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையிலும், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான கலைஞர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அறிவித்து நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், வாழும் காலத்திலே தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வாரி வழங்கி இன்றும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை ஓராண்டு காலம் மக்களுக்கு பயன் தரத்தக்க வகையில் நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார்.
அந்த ஆணைக்கிணங்க, 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் மிகச் சிறப்பாக பொதுமக்கள், மாணவ, மாணவியர், மகளிர் என அனைத்து தரப்பினராலும் கலைஞர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கலைஞரின் நினைவிடம் திறக்கப்பட்ட நாள் முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து, அவருடைய வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், சமூக நீதிக்கான பங்களிப்புகள், செயல்படுத்திய திட்டங்கள், இதழியல் துறை, கலைத்துறை போன்ற பல்வேறு துறைகளில் அவர் புரிந்த சாதனைகள் குறித்து ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞரின் நினைவிடத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் ‘தமிழரசு’ வாயிலாக தயாரிக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் தொகுதி -1, தொகுதி -2 மற்றும் தொகுதி -3 ஆகிய சிறப்பு மலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கலைஞரின் நூற்றாண்டு நிறைவையொட்டி சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் குறும்படத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த “கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்” சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, கலைஞரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், செயல்படுத்திய அரசுத் திட்டங்கள் போன்றவற்றை விளக்கும் குறும்படத்தையும் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வாரியத் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post 101வது பிறந்தநாளை ஒட்டி கலைஞர் நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலர்களை முதல்வர் வெளியிட்டார்: சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் குறும்படத்தையும் பார்வையிட்டார் appeared first on Dinakaran.